தேடல் தொடங்கியதே..

Saturday 18 May 2013

கீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் !


கீழக்கரை நகரின் மிக பிரதானமான பொழுது போக்காக, விடுமுறை தினங்களில் இருக்கும் நண்பர்களுக்கு, உள்ளூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பிக்னிக் செல்வது, தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. அது போன்று பிக்னிக் செல்பவர்களின் அதி முக்கிய ஸ்பெசலாக, பட்டை சோறு இருக்கிறது.



பனை ஓலைப் பட்டையில் கமகமக்கும் வாசத்தில், வசக்கிய மாட்டுக் கறியுடன், தாளிச்சா ஊற்றி பரிமாறப்படும் தேங்காய் சோறு சாப்பாடு, உண்பர்களின் பசியை போக்குவதுடன், மீண்டும் இது போன்று பட்டையில் சாப்பிடும் காலம் எப்போது வரும்.? என்று ஏங்கத் தூண்டுகிறது. இப்போது பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையில் இருக்கும் மாணவ மணிகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் உள்ளூர் பகுதிகளில் உள்ள தோட்டங்கள், பட்டை சோறு வாசனையால் களை கட்ட துவங்கி இருக்கிறது.



வருடம் ஒரு முறை வளைகுடா நாடுகளில் இருந்து விடுமுறையை சொந்தங்களுடன் கழிப்பதற்காக கீழக்கரைக்கு வரும் நண்பர்கள், மறக்காமல் ஒரு முறை தேர்ந்தெடுக்கும் பொழுது போக்காக பக்கீர் அப்பா தர்கா அருகில் இருக்கும் மூர் தோட்டமோ, செய்யது அப்பா தர்ஹா அருகில் இருக்கும் M.L.A. தோட்டமோ செங்கல் நீரோடையில் இருக்கும் மேலத் தெரு பெரியவர்களின் தோட்டமோ அல்லது  சாராம்மா தோட்டமோ இடம் பெற்று விடுகிறது.

இங்கு காலையிலேயே நண்பர்களுடனும், சொந்த பந்தங்களுடனும் செல்பவர்கள், அந்த தோட்டங்களில் இருக்கும் பெரிய நீர் தொட்டிகளில் குளிப்பதுடன், கடலிலும் ஒரு நீச்சலை போட்டு விட்டு, மதிய வேளையில் அகோரப் பசியுடன் அமரும் போது, அவர்களுக்கு பனை ஓலைப் பட்டை கைகளுக்கு எட்டுகிறது. 



பட்டை சோறை ஒரு பிடி பிடித்து விட்டு, இயற்கையின் அரவணைப்பில் தென்னந்தட்டிகளை விரித்து ஒரு குட்டி தூக்கத்தை போடும் நண்பர்கள், மன அழுத்தங்களை எல்லாம் நொடிப் பொழுதில் தொலைத்து விட்டு புத்துணர்வோடு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்புகின்றனர்.

இது குறித்து துபாய் ETA STAR STEEL நிறுவனத்தில் பணியாற்றும் கீழக்கரை நசீர் சுல்தான் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதி இருக்கும் கவிதை வரிகள் :

நாளெல்லாம் 
தட்டையில் சோறு உண்டோர்...
பட்டையில் சோறு உண்ண 
பக்கீரப்பா செல்வோம்..!

தலையில் ஈரம் சொட்டும் 
தலை துவட்டா குளியலுக்கு 
கடல் காற்றே மின் விசிறி...
கீழக்கரையின் 
பட்டை சோற்றுக்கு நான் 
பரம விசிறி..!

கடல் குளித்து 
மண்ணில் உருண்டு 
மணலை பூசி 
சிப்பி பொறுக்கி 
சிறு நண்டுடன் விளையாடி 
சட்டிக்கு அருகில் 
சாய்ந்து உட்கார்ந்து 
பட்டையில் இட்டதை 
பார்க்கும் போதே...
பசி பட்டையை கிளப்பும்.!

எப்படியும் 
பட்டையில் 
இறைச்சியுடன் தாளிச்சா 
கெட்டிதேங்காய் பாலில் 
கட்டியாய் கரைத்த புளியாணம் 
கட்டாயம் இருக்கும்...
கப கப என்ற காட்டு பசிக்கு 
கட்டாயம் இனிக்கும்..!

உண்டு களைத்து 
உறக்கம் மீறும் போது
கிடைக்கும் 'கட்டாங் காப்பி' 
களைப்பை விரட்டும் - மாலை 
கருக்கலில் ஊர் திரும்ப 
மறு வருட இடை வெளி 
நினைத்து மனசு வலிக்கும்.!?

(கீழை இளையவன் மறு மொழி: உங்கள் கவிதை வரிகளை படித்துக் கொண்டிருக்கும் போதே.. 'பட்டை சோறு' நினைப்பில் பசி பட்டையைக் கிளப்புகிறதே...)



இது குறித்து தின மலர் நாளிதழின்  மதுரை பதிப்பில் அக்கம் பக்கம் பகுதியில் இன்று (18.05.2013) கீழக்கரையின் பட்டை சோறு பற்றிய செய்திக் குறிப்பை மூத்த பத்திரிகையாளர். அருமை சகோதரர். ஜனாப். தாஹீர் ஹுசைன் அவர்கள் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். 

நன்றி : தின மலர் 'அக்கம் பக்கம்' 

என்ன நண்பர்களே... 
நாமும் ஒரு பட்டை சோறு பிக்னிக்கை போடலாமா ??

2 comments:

  1. It is immense pleasure on your article of " PATTAISORU" (as shown on photo) a mouth watering special, significantly for the people of Kilakkarai who are returned to their abide on vacation from abroad and enjoying with their friend and family.
    Your articles induce me to visit soon our kilakarai and to enjoy Pakkirappa and other Thotta picnic.
    Thank you very much for you to publish mine on your BlogSpot. God bless you.
    NAZIR SULTAN

    ReplyDelete
  2. பனை ஓலை பட்டையில் மஞ்ச சோற்றுக்கு சீலா மீன் அல்லது மணலை மீன் கருவாட்டு ஆணத்தில் மொச்ச பயிறு போட்டு தொட்டுக் கொள்ள முருங்கை கீரை, அவித்த முட்டையுடன் ஆஹா என்ன ஒரு உண்ட மயக்கம்.....

    ReplyDelete