தேடல் தொடங்கியதே..

Tuesday 18 June 2013

கீழக்கரையில் குற்றாலம் பகுதி 'மங்குஸ்தான் பழங்கள்' விற்பனை படு ஜோர் - போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள் !

குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் துவங்கியதும், கீழக்கரை நகரவாசிகள் மறக்காமல், குறைந்தது நான்கு நாள்கள் குற்றாலம்  சென்று அருவிகளில் நீராடி வருவது வழக்கம். அவ்வாறு சென்று திரும்பும் நம் சொந்தங்கள் ஊர் திரும்பும் போது, மங்குஸ்தான் பழமும், திருநெல்வேலி   இருட்டுக்கடை அல்வாவும், நேந்திரம் பழ சிப்ஸும்   வாங்காமல் வருவதில்லை. அவர்கள் கூடை நிறைய வாங்கி வரும் மங்குஸ்தான் பழங்களை, குடும்பத்தார்களுக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் குறைவின்றி கொடுத்து மகிழ்வதில் அலாதி சந்தோசம் கொள்வர். ஆனால் தற்போது குற்றாலம் சென்று திரும்பும் கீழக்கரை வாசிகளின் சுமைகளை குறைக்கும் வண்ணம், மங்குஸ்தான் பழங்களை குற்றாலம் விலைக்கே, கீழக்கரையில் ஆண்டு தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.


தற்போது கீழக்கரை முஸ்லீம் பஜாரில் ஈசி ஜெராக்ஸ் எதிர்புறம் மங்குஸ்தான் லிச்சி மற்றும் மாம்பழங்களின் விற்பனை களை கட்டி இருக்கிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் விளையும் இந்த பழங்களை, தற்போது குற்றாலம் சீசன் துவங்கியுள்ள நிலையில், விற்பனை செய்து வருகின்றனர். மங்குஸ்தான், லிச்சி பழங்கள் விலை தலா ஒரு கிலோ ரூ.200 க்கும், மாம்பழம் விலை மூன்று கிலோ ரூ.200 க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனை போட்டி போட்டு வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்த வருகின்றனர். கடந்த ஆண்டும் மங்குஸ்தான் பழம் ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து திருநெல்வேலி பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் மசூது அவர்கள் கூறும் போது "குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மிக சரியான காலத்தில் துவங்கியுள்ளது. மங்குஸ்தான் பழங்களின் விளைச்சலும் நல்லபடியாக வந்துள்ளது.  இன்று தான் கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளோம். இந்த முறையும் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்." என்று மகிழ்ச்சி தாங்கிய எதிர்பார்ப்புடன் தெரிவித்தார். 


இது குறித்து நாம் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரையில் குளிர்ச்சி தரும் மங்குஸ்தான், லிச்சி பழங்களின் அனல் பறக்கும் விற்பனை - கடும் விலையால் பொதுமக்கள் வருத்தம் !

No comments:

Post a Comment