தேடல் தொடங்கியதே..

Tuesday, 18 June 2013

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் - உயிரிழப்புகள் ஏற்படும் முன் சீர் செய்யப்பட 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கோரிக்கை கடிதம் !

கடற்கரை நகரமாகத் திகழும் நம் கீழக்கரை நகரில் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மிகுந்த நெருக்கத்திலான வீடுகளும், மிகக் குறுகிய சாலைகளும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் சமீப காலமாக பெரும்பாலான மின் கம்பங்களிலிருந்து, உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் கடந்த காலங்களில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. மேலும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்களால் ஆபத்துகள் நிகழ்வது எதிர்நோக்கப்பட்டுள்ளது.


முற்றிலும் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பம்.

கீழக்கரை சின்னக்கடை தெருவிலிருந்து இஸ்லாமியா பள்ளிகளுக்கு செல்லும் வழியில், எரோபிலான் ஹாமீது காக்கா வீடு அருகே சிமிண்டினால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. அதில் பொருத்தப்பட்டு இருக்கும் மெயின் பெட்டி மற்றும் பீஸ் கேரியர் திறந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதி, பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் நடமாடும் சாலையாக இருப்பதால் ஆபத்துகள் ஏற்படும் முன் நாம் விழித்துக் கொள்வது அவசியம். இது தவிர கீழக்கரை பழைய குத்பா பள்ளி முன் புறம், பருத்திக்காரத் தெரு, வள்ளல் சீதக்காதி சாலை சதக்கதுன் ஜாரிய நடுநிலைப் பள்ளி முன் புறம், மொட்டப் பிள்ளை தெரு போன்ற இடங்களில் இருக்கும் மின் கம்பங்கள் அபாய நிலையில், உயிர் பறிக்க ஊசலாடி வருகிறது.

இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு முறையான புகார் மனுக்கள் அளித்தும் பயன் ஏதும் இல்லை. எனவே பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனடியாக மாற்றி, நம் நகரின் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க அனைத்து பொது நல அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வருத்தத்துடன் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளுக்கு, தகுந்த சான்றாவனங்களுடன் கோரிக்கை  கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழக துணைத் தலைவர். திரு. M.மாணிக்கம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் இருக்கும் பெரும்பாலான மின் கம்பங்கள் 40 வருடங்களை தாண்டியதாக உள்ளது. கடலின் உப்புக் காற்றால் சிதிலமடைந்து, முறித்து விழும் நிலையில் காணப்படும் இந்த மின் கம்பங்கள் எப்போது முறித்து விழுமோ? என்று அச்சப்படும் வகையில், ஊசலாடும் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.

இதனால் பொது மக்கள் பீதியுடன் நடமாடும் அவல நிலையில் உள்ளனர். பல தெருக்களில் மின்சார வயர்கள் சிக்கலான வகையில் பின்னிப் பிணைந்து உரசி கொண்டிருப்பதால், அடிக்கடி தீப்பொறிகளுடன், மக்கள் நடமாடும் வீதிகளில் விழுகிறது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி தொடர் முற்சிகளை மேற்க் கொண்டு வருகிறோம்." என்று மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment