தேடல் தொடங்கியதே..

Wednesday, 26 June 2013

கீழக்கரை தெருக்களில் தொடர்ந்து கொட்டப்படும் கட்டுமானப் பொருள்கள் - கடும் போக்குவரத்து இடையூறால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்பு !

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், ஜல்லி, செங்கல், கட்டுமான இடிபாடுகள் போன்றவைகள்,போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கொட்டப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இந்த தெருக்களை கடந்து செல்ல முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 


இது குறித்து மீன் கடைத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர். செய்யது காசீம் அவர்கள் கூறும் போது " கீழக்கரையில் எந்தப் பகுதிக்கு போனாலும் கட்டுமானப் பொருள்களை நடு ரோட்டில் கொட்டி விட்டு போய் விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், இடறி கீழே விழுது விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.இந்த தெருக்களை கடந்து செல்லும் பள்ளி வாகனங்களும், ஆட்டோக்களும், சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருக்கும் மணல், ஜல்லி போன்றவற்றில் சிக்கி கடும் அவதி ஏற்படுகிறது. மானவரிகள் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் வேதனை அடைந்து வருகின்றனர்.இதனை உடனே சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார் 

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணைச் செயலாளர் B. செய்யது காசீம் அவர்கள் கடந்த ஆண்டு இதே பிரச்சனை எழுந்த போது கூறியதாவது "தார்ச் சாலையாக இருந்த சாலைகள் பலவும், தற்போது மீண்டும் மணல் சாலைகளாக மாறி வருகிறது. முக்கியமாக கீழக்கரை நடுத் தெரு, சாலை தெரு, O.J.M.தெரு உள்ளிட்ட தெருக்களில் மணல் குவியல்கள் அதிகமாக கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் பிரதான சாலைகளில் உள்ள மணல், ஜல்லி போன்றவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த, கட்டிட உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வகையில் கொட்டப்படும் லாரிகள், டிராக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.  இது குறித்து ஜின்னா தெருவைச் சேர்ந்த மேஸ்திரி ஹபீப் அவர்கள் கூறும் போது "நமது ஊரைப் பொருத்தமட்டில் மிகக் குறுகிய சாலைகளையும், நெருக்கமான வீடுகளையும் கொண்டு அமைந்துள்ளது. வேறு வழியில்லாமல் தான் இது போன்று சாலைகளில் கொட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலைகளில் கொட்டிய பிறகு அதனை அகற்றுவதற்கு வேலையாள்கள் பல நேரங்களில் கிடைக்காமல் போவதாலும் தொடர்ந்து இரண்டு அல்லது 3 நாள்கள் அங்கேயே கிடக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சாலைகளில் மணலை கொட்டக் கூடாது என்றால், யாருமே வீட்டு கட்டுமான வேலைகளை செய்ய முடியாது." என்று தெரிவித்தார்.நம் நகரின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, மணலை கொட்டி விட்டு உடனே அள்ளுவதற்கு, வேலையாள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது எந்த பிரச்சனைகளும் எழ வாய்ப்பில்லை. அதோடு மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களில் மட்டுமாவது, கட்டுமான பொருள்களை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் என்றால், கீழக்கரை நகராட்சி சார்பாக, கீழக்கரையில் முக்கு ரோடு பகுதியிலிருந்து கடற்கரை வரை உள்ள மெயின் ரோட்டில் குவிந்திருக்கும் மணலை அப்புறப்படுத்துவதற்கு ரூ.500000 (ஐந்து இலட்சம்) டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது. ஆனால் எந்த இடத்திலும் மண்ணை அல்லாமல், பணத்தை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். விரைவில் இவர்களின் வாயிலும் மண் தான் விழும் என்பதில் மாற்றமில்லை.

No comments:

Post a Comment