தேடல் தொடங்கியதே..

Friday, 23 August 2013

கீழக்கரையில் தொடர்ந்து 4 வது நாளாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) பண பரிவர்த்தனைகள் பாதிப்பு - வாடிக்கையாளர்கள் கடும் அவதி !

பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த மூன்று நாள்களாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைய வங்கி கோர் பேங்கிங் கணினி இணைப்பில் (சர்வர்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில் கீழக்கரை ஐ.ஓ.பி., கிளையிலும் அனைத்து பண பரிமாற்றங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் பத்திப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (23.08.2013) 4-வது நாளாக இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது. வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணபரிமாற்றம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட பெரும் வங்கி ஒன்றில் இத்தகைய கோளாறுகள் ஏற்படுவது இந்தியாவின் தொழிற்நுட்பியல் வலிமையை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்குவதாக வங்கி வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து ஐ.ஓ.பி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், புதுக் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது " கீழக்கரையில் ஏற்கனவே ஐ.ஓ.பி., கிளை போஸ்ட் ஆபீஸ் அருகில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

தற்போது இது மலேரியா மையம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் ஊழியர்களும் எப்போதும் மந்த கதியிலேயே பணியாற்றுவது வழக்கம். இந்நிலையில், பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப் பட்டுள்ளதால், கடந்த நான்கு நாள்களாக அலைக் கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். 

இன்றாவது இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா.? என்று தெரியவில்லை. விரைவில் இந்த பிரச்சனயை சீர் செய்ய வங்கி உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment