தேடல் தொடங்கியதே..

Monday, 19 August 2013

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) காலமானார் !

பேராசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், ஆன்மீக மேடை பேச்சாளர்  என்று பல்வேறு பரிணாமங்களில் சிறப்பாக பணியாற்றிய 'அப்துல்லாஹ்' பெரியார்தாசன் அவர்கள் (வயது 64) சென்னையில் இன்று காலமானார்.
 
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.)

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும், தீவிர திராவிட கழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் மார்க்கத்தின் அழகிய வழிகளை ஆத்மார்த்தமாக உணர்ந்து, இஸ்லாத்தில் இணைந்து, மக்கா நகரத்திற்கு சென்று, இறை கடமைகளை நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடல் நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள க்ளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஒரு மாதமாக அவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. இந்நிலையில், திங்களன்று முன்னேரம் 1.30 மணியளவில் அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் காலமானார்.

மறைந்த அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் சென்னை பெரம்பூரில் பிறந்தவர். சேசாலம் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர், பச்சையப்பன் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றினார். 


ஆரம்பத்தில் பெரியாரியவாதியாக இருந்தவர், பின்னர் பவுத்தத்தையும் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மார்க்கத்தில், தன்னை இணைத்து கொண்டார். ஆரம்ப காலத்தில் மதிமுகவில் சேர்ந்தவர், கடைசிவரை அக்கட்சியின் பேச்சாளராகவும் இருந்தார்.

தமிழக மேடைப் பேச்சுக் களத்தில் தென்பகுதியினரே அதிக அளவில் செல்வாக்காக இருந்த நிலையில், வட தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக வட ஆற்காடு பாணியிலான தன்னுடைய பேச்சின் மூலம், தமிழகம் முழுவதும் இன்றி, தமிழர் வாழும் பல நாடுகளிலும் பெரும் கூட்டத்தைக் கூட்டும் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார்.


சமீப காலமாக இஸ்லாம் மார்க்கத்தின் இனிய கொளகைகளை, மக்கள் மத்தியில் சிறப்புற மேடைகளில் முழங்கி வந்தார். கடந்த 09.02.2013 அன்று கீழக்கரையில் நடை பெற்ற மீலாது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் இஸ்லாம் மார்க்கத்தை  முழுமையாக பின்பற்றிய பின்னர், 'தனக்குள் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள்' குறித்தும் 'இஸ்லாத்தின் மகிமைகள்' குறித்தும் தெளிவுற விளக்கி பேசினார்.

பேராசிரியர். அப்துல்லாஹ் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள எழுத்தாளர் ஆவார்.

1 comment:

 1. யா அல்லாஹ்!
  இவர்களுக்கு கபரின் வாழ்க்கையை இலகுவாக்கி வைப்பாயாக...
  யா அல்லாஹ்!
  இவர்களுக்கு கபரின் கேள்விகளை இலகுவாக்கி வைப்பாயாக...
  யா அல்லாஹ்!
  இவர்களை மறுமையில் நல்லோர்களுடன் எழுப்புவாயாக...
  யா அல்லாஹ்!
  இவர்களுக்கு சுவர்க்கத்தை ஆகுமானதாக்கி,
  நரகிலிருந்தும் காப்பாயாக...
  யா அல்லாஹ் இவர்களுடைய குடும்பத்தார்க்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக

  ReplyDelete