தேடல் தொடங்கியதே..

Wednesday 30 October 2013

கீழக்கரை பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு - 'டெங்கு' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் நில வேம்பு கசாயம் !

கீழக்கரையில் தற்போது எங்கு நோக்கினும் மலேரியா, டெங்கு, மர்ம காய்ச்சல் என்று பல்வேறு விதமான முடக்கிப் போடும் காய்ச்சல்கள் வலம் வருகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் முதல் இராமநாதபுரம் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வருகிறது. இதனால் கீழக்கரை பகுதியில் 'டெங்கு' தீவிரத்தை தடுக்க, கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில், செயல்பட்டுவரும் சித்த மருத்துவ பிரிவில் "நிலவேம்பு' கசாயம் கொடுக்கும் முறை, கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. 


இது குறித்து நம்மிடையே பேசிய சித்த மருத்துவர் (பொறுப்பு) பிரபா அவர்கள் கூறும் போது "கீழக்கரை சித்த மருத்துவ பிரிவு வளாகத்தில் எல்லா நாள்களிலும், காலை 8 மணி முதல் 12 மணி வரை நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. நோய் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நிலவேம்பு சாயத்தை குடிப்பது நல்லது. இங்கு கசாயம் தவிர நிலவேம்பு பொடியும் தருகிறோம். வீடுகளில் நீங்களே காய்ச்சி குடித்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்." என்று தெரிவித்தார்.



கடந்த 2012 ஜூனில் டெங்கு பாதிப்பை தடுக்க, நிலவேம்பு கசாயத்தை அரசே பரிந்துரை செய்தது. அதனை தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் "டெங்கு' பீதி தொற்றியுள்ளதால், தமிழகமெங்கும் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் 'நிலவேம்பு' கசாயம் வழங்கும் முறை துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "டெங்கு' காய்ச்சல், குழந்தைகளை குறிவைக்கும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு கட்டாயம், நிலவேம்பு கசாயம் கொடுப்பது நல்லது. மேலும் பால் கொடுக்கும் தாய்மார்களும், கசாயம் குடிப்பதால், குழந்தையின் நலன் பாதுகாக்கப்படும். 

No comments:

Post a Comment