தேடல் தொடங்கியதே..

Thursday 31 October 2013

கீழக்கரையில் 'பயணிகள் நிழற்குடை' நிறுவப்பட பொதுமக்கள் வேண்டுகோள் ! (மறு பதிவு)

கீழக்கரையில் இருந்து தினமும் இராமநாதபுரம், ஏர்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் பேருந்தில் பயணிக்கின்றனர். இவர்கள் தவிர பள்ளி செல்லும்  மாணவ, மாணவியர், சிறுவர்கள், மருத்துவ மனைக்கு செல்ல குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்மணிகள், முதியவர்கள் என ஏராளமானோர், சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து வாடி வதங்குகின்றனர்.

கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், பஞ்சாயத்து அலுவலகம்,  வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் பல இயங்குகின்றன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு பணி காரணமாக  கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரை நகருக்குள் (பழைய பஸ் ஸ்டான்ட், கடற்கரை வரை) மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் வருகிறது.  

இவர்களுக்கு நிழலில் ஒதுங்கி அமர்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், சாலைகளின் ஓரத்தில், நிழலை தேடி  ஒதுங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தங்களின் நிலையை உணர்ந்து, நகராட்சி நிர்வாகம் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களிடம் கேட்ட போது " பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  பயணிகள் நிழற்க் குடை விரைவில் அமைக்கப்படும். இதற்கான தீர்மானம் நகர் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி ஆணையரின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

(குறிப்பு : இது கடந்த 09.04.2012 அன்று சொன்னது... இன்னும் காத்திருக்கிறோம்... நிழலை தேடி !)

சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்தோ, நகராட்சி  நிர்வாகம் சார்பிலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நன்கொடை மூலமாகவே பயணிகள் நிழற்குடையை அமைக்க உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

No comments:

Post a Comment