தேடல் தொடங்கியதே..

Friday 15 November 2013

கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !

கீழக்கரையில் உள்ள லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கம்) மேல் பகுதி வரை கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் பெற்று அனுமதித்து வந்தனர்.  முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை சம்பவத்திற்கு பின் கீழக்கரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து லைட்ஹவுஸ்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பார்வையாளர்களுக்கு இன்று வரை அனுமதி இல்லை. பின்னர், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு கருதியது. 


இதன் விளைவாக மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அது போல பல்லாண்டு காலமாக இப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலங்கரை விளக்கத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

கலங்கரை விளக்கத்தின் உச்சியின் மேல் இருந்து பார்க்கும் போது, சில்லென்று வீசும் வேகக் காற்றுடன், கீழக்கரையின் எழில் கொஞ்சும் இயற்கை அழகையும், பல்லாயிரம் மக்கள் வசிக்கும் நகரில், மிக நெருக்கமாக அமையப் பெற்றிருக்கும் பல வண்ண வீடுகளையும், அதற்கிடையே கம்பீரகாக காட்சி தரும் பள்ளி வாசல்களின் கோபுரங்களையும்   பரந்து விரிந்த நீலக்கடளுக்குள் அமைந்திருக்கும் அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகளையும், தென்னந் தோப்புகளுக்கிடையே வளைந்து நெளிந்து செல்லும் கடலோரப் பாதைகளின் இரம்மியமான அழகையும் கண்டு இரசிக்க முடியும்.




கலங்கரை விளக்கங்கள் குறித்த சுவாராஸ்யமான தகவல்கள் :

இந்தியாவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், கலங்கரை விளக்கங்கள் உருவாக்கப்பட்டன. `வெளிச்ச வீடு' என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கங்கள், ஆரம்ப காலத்தில் எரியும் விளக்குகள் மூலமாக ஒளிட்டப்பட்டன. பின்னர், பெரிய மெழுகுவர்த்தி மூலம் ஒளிட்டப்பட்டன. அதன் பின்னர், 1781- ஆம் ஆண்டு ஆர்கண்ட் விளக்குகள் மூலம் கலங்கரை விளக்கங்கள் இயங்கின. 1850-ஆம் ஆண்டில் திமிங்கல எண்ணெயும், தாவர எண்ணெய்யும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன.

20- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மின்சாரம் மூலம் இயங்கும் விளக்குகள் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகளில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தை குவியச் செய்து, வெளியே அனுப்புவதால் மிகவும் பிரகாசமான ஒளி நீண்ட தூரம் தெரியும். அதாவது, 20 கடல் மைல் தொலைவில் இருந்தே கலங்கரை விளக்கத்தின் ஒளியை காண முடியும்.

தற்போது, கலங்கரை விளக்கத்தில், அதிநவீன மெட்டல் ஹலைடு விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வானிலை மோசமான காலத்திலும், ஒளியை தெளிவாக பார்க்கலாம். மேலும், ரேடியோ அலைகள் மூலம் எச்சரிக்கை தகவல்களும் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கலங்கரை விளக்கத்தில் இருந்து பாய்ச்சப்படும் ஒளியை, கப்பலில் இருந்தபடியே மாலுமிகளால் காணமுடியும். ஒளியை வைத்தே, கரை எவ்வளவு தூரத்தில் உள்ளது?, கடற்கரைக்கு அருகில் பாறைகள் எதுவும் உள்ளதா? என்பதை மாலுமிகள் கண்டறிந்து விடுவார்கள்.

இந்தக் கலங்கரை விளக்கத்தால் நிலப்பரப்பில் வாழும் மனிதர்களுக்கு பயனில்லை என்றாலும், கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் பெரும் பயனாக விளங்கி வருகிறது. இரவு நேரங்களில் துறைமுகங்களை நோக்கி வரும் கப்பல்களுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் சரியான வழி காட்டியாக விளங்குகிறது.

கீழக்கரை கலங்கரை விளக்கம் குறித்த சுவாராஸ்யமான தகவல்கள் :

நம் நாட்டில் 7 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கடற்கரைகளில் 180 கலங்கரைவிளக்கங்கள் உள்ளன. கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில், சென்னை, முட்டம், கன்னியாகுமரி, மணப்பாடு, கீழக்கரை, பாம்பன், ராமேஸ்வரம், பாசிப்பட்டினம், அம்மாபட்டினம், மாலிப்பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், பூம்புகார், மகாபலிபுரம், புலிக்காடு உள்பட 21 (லைட்ஹவுஸ்) கலங்கரை விளக்கங்களில் ஒன்றான கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979 முதல் செயல்படுகிறது.



35 மீட்டர் உயரமும் 15 நொடிக்கு ஒருமுறை வெளிச்சத்தை உமிழும் சக்திவாய்ந்த விளக்கை கொண்டது. இதன் சுழல் விளக்கு 100 மீட்டர் சுற்றளவுக்கு ஒளி தரக் கூடிய ஆற்றல் பெற்றது. இங்கு ரேடார் கருவியுடன் பகல் மற்றும் இரவு நேரத்தில் கடல் பகுதியை தெளிவாக கண்காணிக்க கேமரா உள்பட நவீன கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்பு படையினர் இவற்றின் மூலம் கடல் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

மும்பையில் கடந்த ஆண்டு நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து இந்திய கடலோரங்களில் கண்காணிப்பை பலப்படுத்தவும், கடலில் செல்லும் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில்  மத்திய அரசு கலங்கரை விளக்கங்களில் ராடார் கருவிகளை பொருத்தியுள்ளது. கீழக்கரை கலங்கரை விளக்கத்திலும் அது போன்ற ராடார் பொருத்தப்பட்டுள்ளது.

 



கீழக்கரை கலங்கரை விளக்கத்தின் உச்சிப் பகுதி வரை ஏழு சுற்றுககளில் மொத்தம் 138 படிக்கட்டுகள் உள்ளன.

04.11.1977 ஆம் நாளன்று துவங்கப்பட்ட, கீழக்கரை கலங்கரை விளக்கத்தின் கட்டுமானப் பணிகள் 28.02.1979 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனை கட்டி முடிப்பதற்கு ஆகிய மொத்த செலவு, சிவில் இஞ்சினியரிங் வேலைகளுக்கு 9,42,500 ம், அதில் மின் சாதன கருவிகள் நிறுவிய வகையில் ரூ. 2,38,900 மும், ஆக மொத்தம் 11,81,400 (பதினோரு இலட்சத்து என்பத்து ஓராயிரத்து நானூறு மட்டும்)

இந்த கலங்கரை விளக்கத்தை காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளன்று 1979 ஆம் வருடம் சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின்  அப்போதைய தலைவர் திரு. கார்னிக் அவர்கள் திறந்து வைத்தார்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா15 November 2013 at 18:49

    சபாஷ்... இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு அருமையான தகவலைக் கொண்டு செல்லும் சிறப்பான கட்டுரை. ஊரில் இருப்பவர்கள் பலருக்கும் அறியாத அரிய தகவல்களை பகிர்ந்துள்ள வரலாற்றுச் சுவடுகள்.

    வர்த்தக கப்பலில் பல்லாயிரகணக்காண கடல் மைல்களை பயனித்தவன் என்ற முறையில் சிறு தகவல்.

    ஒரு கடல் மைல் (NAUTICAL MILE) என்பது சுமார் 1.8 கிலோ மீட்டராகும்.கலங்கரை விளக்கு வெளிச்சத்தில் நீருக்குள் இருக்கும் (கரையில் உள்ளவையாக இருந்தாலும்) பாறைகள தெரிய வாய்ப்பில்லை .

    வெறும் கண்களுக்கு தெரியாத .கடலுக்குள் இருக்கும் பாறைகள், நடுகடலில் மூழ்கிய கப்பல்கள், சர்வ தேச நாடுகளால் மூழ்கடிக்கப்பட்ட பயன் படாத ராணுவத் தளவாடங்கள் போன்றவைகளை கப்பலில் இருக்கும் வரை படத்தில் (சுருக்கமாக பிஎ. சார்ட் - BRITISH ADMIRAL CHART - என்பார்கள். இதை வைத்து கேப்டன் - ஏரியாவுக்கு புதியவராக இருப்பினும் - எத்தகைய கடல் வழியிலும் பயணிப்பார்.

    கீழக்கரை நகர் நல இயக்கம் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக் குரியது. அயராது தொடர் முயற்சி எடுத்து (FOLLOW UP) வெற்றி காண நல் வாழ்த்துகள்.முடியுமானால் முன்னால் இராமநாதபுரம் மாவட்ட சட்ட மன்ற பிரதிநிதி நமதூர் ஜனாப். ஹசன் அலி காக்கா மூலம் மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு. வாசன் அவ்ர்களை தொடர்பு கொண்டால் நிச்சயாமாக உங்களின் முய்ற்சி பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete