தேடல் தொடங்கியதே..

Thursday 15 March 2012

கீழக்கரை புதிய கடல் பாலத்தில் தொடர்ந்து மீறப்படும் விதிமுறைகள் - காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

நம் கீழக்கரையில்  புதிய கடல் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், இங்கு தினமும் அனைத்து நேரங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 2006 ஆம் ஆண்டு, அப்போதைய திமுக அரசால் ரூ5 கோடியே 31லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாலத்தை சுற்றி குவியும் மணல் திட்டுகளை சரி செய்யும் பொருட்டு ,இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது.


அறிவிப்பு பலகை வைத்து என்ன செய்ய ?




இதற்கிடையில் அங்கு நடைபெறும் கலாச்சார சீர்கேடுகள் குறித்து, காவல் துறையினர் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.  இங்கு பொழுது கழிக்க வரும் பல இளைஞர்கள் புதிய பாலத்தை மது அருந்தும் 'பாராக'  மாற்றியதும், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பாலத்திற்குள் வந்து செய்யும் ரகளைகளும் தடுக்கப்பட, சமூக ஆர்வலர்கள் பலராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.



ஆனாலும் இந்த பகுதியில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையே இருந்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் உள்ளே வருபவர்கள், கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் நேராக பாலத்திற்குள் சென்று 'ஸ்டன்ட்' (ஆபத்தான விளையாட்டுக்கள் செய்வது) இப்போதும் குறைந்த பாடில்லை. பல நேரம் இந்த குறுகிய பாலத்திற்குள் பைக் ரேஸ்கள் விடப்படுவதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே....


இது குறித்து இந்த பகுதியில் வசிக்கும் அஹமது தெருவைச் சேர்ந்த ஹபீபு முஹம்மது அவர்கள் கூறும் போது "புதிய கடல் பாலம் இன்னும் இங்கு திறக்கப்படாத போதும், தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து போகிறார்கள். கடந்த மாதங்களில் இங்கு இரவு நேரங்களில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது.  அதன் ஒரு கட்டமாக, காவல் துறையின் அறிவிப்பு பலகைகள் அங்கு பல இடங்களில் வைக்கப்பட்டது.





ஆனால் இங்கு வரும் இளைய சமுதாயம் அதை  எல்லாம்  பொருட்படுத்துவதே  இல்லை. புகார்கள் எழுந்த சில நாட்களுக்கு மட்டும் காவல் துறையினர் இந்த பகுதிக்கு தினமும் ரவுண்ட்ஸ் வந்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது மீண்டும் இங்கு பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறது. ஆகவே காவல் துறையினர் தொடர்ந்து இந்த பகுதிக்கு கண்காணிப்பு பணிகளை மேற்க்கொள்ள வேண்டும்." என்று புலம்பலுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment