தேடல் தொடங்கியதே..

Saturday 3 August 2013

துபாயில் தமிழர்களை கவர்ந்த 'சீலா மீன் பிரியாணி' இஃப்தார் விருந்து - ரமலான் முழுவதும் நடைபெறும் 'துபாய் அல் ஸபர்' நிறுவனத்தின் விலையில்லா சேவை !

கீழக்கரை மக்களின் மனம் கவர்ந்த உணவு வகைகளில் ஒன்றாக சீலா மீன் பிரியாணி திகழ்கிறது. விழாக் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும், கீழக்கரை நண்பர்களால் ஏற்பாடு செய்யப்படும் பிக்னிக் பெரும்பாலானவற்றில், இந்த  ருசிமிகு 'சீலா மீன் பிரியாணி' கட்டாயம் இடம் பெறும். வாலிநோக்க‌ம் க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் இந்த மீன்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி, மணம் கமழும் மசாலாவுடன், நெய்யிட்டு பொறித்து, களரி சட்டியில் பிரியாணி சமைத்து பரிமாறுவார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் கீழக்கரை மக்களுக்கு, இந்த சீலா மீன் பிரியாணி வருடம் ஒரு முறை நாடு திரும்பும் போது மட்டுமே ருசி பார்க்க முடியும். ஆனால் தற்போது துபாயில் வசிக்கும் கீழக்கரை வாசிகளுக்கு மட்டுமல்லாது, இஸ்லாமிய தமிழர்கள் அனைவருக்கும்  சாத்தியமாகி இருக்கிறது. உண்மை தான்...
 


துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல் ஸபர் கான்ட்ராக்டிங் என்கிற அரேபிய நிறுவனத்தினரால், வருடம் தோறும் ரமலான் மாதம் முழுவதும் ஏறத்தாழ 150 பேருக்கு தினமும் சீலா மீன் பிரியாணி இஃப்தார் விருந்து நடை பெற்று வருகிறது. பிரியாணியை சமைப்பதில் இருந்து கனிவுடன் பரிமாறுவது வரை முழுக்க முழுக்க தமிழர்களே பொறுப்பேற்று வேலை செய்து வருகிறார்கள். இதில் சமையல் கலைஞர் முஹம்மது தோஸ்த் அவர்களின் மேற்பார்வையில் பணியாளர்கள் ஜமால், முஹம்மது, முபீர், சிராஜ், அபூபக்கர், ஜாபர், சாபில் உள்ளிட்டோர் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள்.

 
 இது குறித்து துபாயில் பணி புரியும் வங்கி அதிகாரி, கீழக்கரையை சேர்ந்த அபுதாஹிர்  அவர்கள் நம்மிடையே பேசும் போது "துபாயில் நமது கீழக்கரை மண் வாசனையுடன் சீலா மீன் பிரியாணி கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கு ரமலான் மாதம் மட்டு மல்லாது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும், எவ்வித விலையும் பெறப்படாமல், சீலா மீன் பிரியாணி பரிமாறப்படுகிறது.

இந்த சேவையை தரும் நிறுவனத்தின் ஸ்தாபகர் அலி அப்துல்லாஹ் அல் ஸபர் அவர்களிடம் பேசினேன். இன்னும் அதிகமான இஸ்லாமிய மக்களை இப்தார் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார். இங்கு 200 பேர்கள் நின்று தொழுவதற்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.



இந்த விருந்து முடிவில் மணம் கமழும் சுவையான சுலைமானி (பால் கலக்காத அரேபிய தேநீர்) பரிமாறப்படுவது இன்னும் சிறப்பாக இருக்கிறது. துபாயில் வசிக்கும் நண்பர்கள் ஒரு முறை இங்கு வந்து, இந்த சீலா மீன் பிரியாணியை சுவைத்து, இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

என்ன நண்பர்களே... இந்த ரமலானில் நாமும் ஒரு விசிட் அடிப்போமா..?

சீலா மீன் பிரியாணி இஃப்தார் விருந்து நடைபெறு இடம் : ஜுமைரா 4, FIRST GULF BANK அருகாமை, துபாய்

இது குறித்த மேலதிக விபரங்களுக்கு துபாயில் இருக்கும் நண்பர்.அபுதாஹிர் அவர்களை 050-4408834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • Abul Hussain தம்பி இளயவரே, நீங்கள் வெளியிடும் செய்திகளில் நம் மண்ணின் மீன் வாசனை படிக்கும் போதே மணக்கிறது.,தொடரட்டும் உங்கள் பணி,...வாழ்த்துக்கள்........

No comments:

Post a Comment