தேடல் தொடங்கியதே..

Saturday, 12 October 2013

இராமநாதபுரத்தில் 'துரித பட்டா' மாறுதல் சிறப்பு முகாம் - ஒவ்வொரு வியாழக் கிழமையும் நடை பெறுகிறது !

தமிழகம் முழுவதும் நடை பெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், "அம்மா' திட்டம் உள்பட பொதுமக்களுக்கான முகாம்களில், பட்டா மாறுதல் சம்பந்தமாகவே மனுக்கள் அதிகம் வருகின்றன. எனவே, துரித பட்டா மாறுதல் சிறப்பு முகாமை வியாழன்தோறும், ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்த அரசு உத்தரவிட்டது.இராமநாதபுரம் தாலுகா அலுவலகம் 

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவான பட்டா மாறுதல் திட்டத்தின்படி சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் இலஞ்சப்பணம் வாரி இறைக்கபடுவதும், இனி பெருமளவு தவிர்க்கப்படும்.

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து துரிதமாக பட்டா வழங்க ஆவன செய்கின்றனர். பட்டாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், சாதாரண வெள்ளைத் தாளில் பட்டா வேண்டி மனு ஒன்றனை எழுதி, சம்பந்தப்பட்ட மூல பத்திரங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தனியாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசு உத்தரவுப்படி, ஆவணங்கள் முறையாக இருந்தால்,உட்பிரிவு செய்யப்படாத  முழுமனைக்கு 15 நாட்களிலும், சப்டிவிஷன் செய்யப்பட வேண்டிய மனைக்கு 30 நாட்களுக்குள்ளும் பட்டா மாறுதல், தாலுகா அலுவலகத்திலேயே வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் பட்டா மாறுதல் கோரி ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும் தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கும் பின்னர் அறிவிக்கப்படும் நாளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்படும். தேதி தொடர்பாக தனியே விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கீழக்கரையில் பட்டா வாங்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4000 முதல் ரூ.7000 வரை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இலஞ்சமாக கப்பம் கட்டாமல் வேலை நடப்பதில்லை. பல் நேரம் இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் இலஞ்சப் பேர்வழிகள், பட்டா பெற்றுக் கொடுக்காமல் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.

ஆகவே கீழக்கரை பகுதி பொதுமக்கள், பணத்தை கொடுத்து விட்டு, அலைந்து திரியாமல், இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் நடை பெறும் இந்த நல்ல முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இலஞ்சப் பேர்வழிகளை, லஞ்ச ஒழிப்பில், முறை படி புகார் செய்து, சிறைக்கு அனுப்ப உதவிடுமாறும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் 

No comments:

Post a Comment