தேடல் தொடங்கியதே..

Monday 7 October 2013

கீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி - 2)

கீழக்கரை நகரத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பலர் கி.பி. 1890 ஆண்டு காலக்கட்டம் முதலே, பொருளாதாரம் தேடி பர்மா சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் உலகப்போர் நடை பெற்ற நேரத்தில் பர்மாவில் இருந்த பல கீழக்கரை வாசிகள் போரில் சிக்கி வபாத் ஆகிவிட்டார்கள். அதில் அஹமது தெருவை சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்துள்ளனர்.



அந்த நிலையில் அஹமது தெரு வறுமை நிலையில் இருந்தது. அப்போது மேலதெரு மக்களின் வீடுகளில் அரிசி வசூல் செய்து அதன் மூலம் கிடைத்த தொகையை வைத்து தொழுகை பள்ளிகளை கவனித்து வந்தனர். பிறகு மேலத்தெரு முக்கியஸ்தர்கள் பள்ளிகளை புனரமைப்பு செய்து கவனித்து வந்ததோடு, மாத வருவாயாக பள்ளி ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கி இருக்கிறார்கள். 



கீழக்கரையில் எவ்வித நவீன பயண அமைப்புகளும் இல்லாத காலத்தில் ஏழு தடவை நடை பயணமாகவும், கடல் வழியாகவும் ஹஜ் கடமையை செய்து முடித்தவர் மர்ஹூம். மஹ்மூது மீரா லெப்பை அவர்கள் தான். இவர் கோக்கா அஹ்மது தெருவை சேர்ந்த முஹைதீன் தைக்காவின் ஆரம்ப கால தலைவர்  மர்ஹூம்.'சவலப்பா' அவர்களின் பாட்டனார் ஆவார். 

முஹம்மது மீரா லெப்பை அவர்கள் உயிருடன் இருக்கும் போதே கிரையம் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அன்னாரின் அடக்கஸ்தலம் ஓடைகரை பள்ளிக்கு மேற்கே UHMS கட்டுபாட்டில் இருக்கும் மதரசாவில் இருக்கிறது. இதற்கு வடக்கே ஹபீப் முஹம்மது மரைக்காயர் அடக்கஸ்தலம் உள்ளது.  



இதிலிருந்து அஹமது தெருவாசிகளின் ஆதி ஜமாத் ஓடைகரை பள்ளி என்பதை அறியலாம். அதன் பிறகு கி.பி 1768 ல் (ஹிஜ்ரி 1182) மேலத்தெருவில் புதுப்பள்ளி (கல்லுப்பள்ளியாக) கட்டப்பட்டிருக்கிறது. கால ஓட்டத்தில் சிதைவுற்ற இந்த பள்ளியை, 2002 ல் ஜமாதார்களின் ஏகோபித்த முடிவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தொழுகை நடந்து வருகிறது.


புதுப் பள்ளியின் பழைய தோற்றம் 

பல வருடங்களுக்கு முன் புதுப்பள்ளியின் அருகில் குளம் ஒன்று அமைந்திருக்கிறது. அதற்கு 'கோக்கா அஹ்மது தெரு குளம்' என்று ஏனைய தெரு வாசிகள் அழைப்பர். மேலத்தெரு முக்கியஸ்தர்கள் ஒரு சிலர், இந்த குளத்தை குத்தகைக்கு பேசி தூர்வார முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அஹமது தெருவாசிகள் சவலப்பா அவர்கள் தலைமையில், அதை தடுத்து நிறுத்தி, 'இந்த இடம் உங்களுக்கு பாத்தியமோ அதிகாரமோ கிடையாது ' என்று கூறி பஞ்சாயத்து செய்து இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் இந்த குளத்தில் தான் குளிக்கவும், தொழுகைக்காக ஒளு செய்யவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது இந்த இடம் ஹமிதியா பெண்கள் மேல்நிலை பள்ளியாக மாறி இருக்கிறது. அதன் எதிரே உள்ள மெட்ரிக் பள்ளியும் அதன் இரு பள்ளிகளுக்கு இடையே உள்ள ரோடும் கபர் ஸ்தானாக இருந்திருக்கிறது.

முந்தைய பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும் : (பகுதி 1)



சரித்திர சேகரிப்பில் உதவி : 

சரித்திர ஆர்வலர். நெய்னா முஹம்மது மற்றும் 'A.S.டிரேடர்ஸ்' கஃபார் கான்

                         பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!      தொடரும் >>>>

No comments:

Post a Comment