தேடல் தொடங்கியதே..

Wednesday, 9 October 2013

மதுரையில் இருந்து துபாய்க்கு 'நேரடி' விமானம் - நவம்பர் மாத இறுதிக்குள் 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் விமான சேவையை துவங்குகிறது !

மதுரையிலிருந்து துபாய் உட்பட வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்க வேண்டுமென கீழக்கரையை சேர்ந்த துபாய் ETA அஸ்கான் நிர்வாக இயக்குனர் செய்யது சலாஹுத்தீன்,  ETA குழும மனித வளத்துறை செயல் இயக்குனர் M.Y. அக்பர் கான் உள்ளிட்டோர்கள் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா  நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் தென் மாவட்டத்தினர் பயன் பெரும் வகையில் அடுத்த மாதம் நவம்பர் இறுதிக்குள் மதுரையிலிருந்து துபாய்க்கு சர்வதேச விமான சேவை துவங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் மதுரை விமான இயக்கக ஆலோசனை குழு தலைவருமான மாணிக்க தாகூர் அறிவித்துள்ளார்.மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு அடுத்தப்படியாக தற்போது துபாய்க்கு விமான சேவை துவங்கயிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான சேவையை 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் மேற்கொள்கிறது. மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், துபாய்க்கு அதிகாலை சென்றடைகிறது.

தென் தமிழகத்திலிருந்து துபாய், ஓமன், கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிகமாக இருக்கின்றனர். இங்கு பணிபுரியும்   மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தினர் உட்பட தென் மாவட்டத்தினர் மதுரையிலிருந்து நேரடி விமான சேவை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.மதுரையிலிருந்து நேரடி விமானம் இயங்கினால், தென் தமிழகம் தொழில் ரீதியான வளர்ச்சி பெறுவதோடு, இராமேஸ்வரம், கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தளங்கள் வளர்ச்சி பெறும்.

தென் மாவட்டங்களிலிருந்து துபாய்க்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் பயணிக்கின்றனர்.தென் மாவட்டத்தினர் 2 லட்சம் பேர் அங்கு பணிபுரிகின்றனர். மேலும் தென் மாவட்டங்களிலிருந்து, ஒரு வாரத்திற்கு சராசரியாக 1200 பேர் வரை துபாய் செல்கின்றனர். சென்னையிலிருந்து செல்லும் சர்வதேச பயணிகளில் 30 சதவீதம் பேர், தென் மாவட்டத்தினர் ஆவர்.தற்போது திருச்சியிலிருந்து செல்லும் சர்வதேச பயணிகளில் 40 சதவீதம் தென் மாவட்டத்தினராகத் தான் இருக்கின்றனர்.

மதுரையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட இருப்பதால், இனி துபாய்க்கு செல்பவர்கள், திருச்சி, திருவனந்தபுரம், சென்னை, கோவை வழியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பயணிகளுக்கு செலவும் வெகுவாக குறைகிறது. மேலும் தென் மாவட்டங்களில் விளையும் 1.5 டன் காய்கறிகள், பழங்கள், மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருள்கள் திருவனந்தபுரம், சென்னை வழியாக கப்பலில் அனுப்பப்படுகிறது. தற்போது நேரடி விமானம் விட்டப்படுவதால், மதுரையிலிருந்தே இவற்றை ஏற்றுமதி செய்ய ஏதுவாகும்.

No comments:

Post a Comment