தேடல் தொடங்கியதே..

Tuesday 8 October 2013

கீழக்கரையில் ஆவி பறக்கும் விற்பனையால் திக்கு முக்காடும் 'செட்டி நாடு இட்லி கடை' - கியூ கட்டி நிற்கும் இட்லி பிரியர்கள் !

"நயினார் அண்ணே..! ஒரு நாலு இட்லியும், கட்டிச் சட்னியும், கூட கொஞ்சம் சாம்பாரும் சீக்கிரமா கட்டுங்க" என்று ஒரே நேரத்தில் ஆறு பேர் குரல் கொடுக்கின்றனர். 

கீழக்கரையில் இட்லி என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது..  'செட்டி நாடு இட்லிக் கடை' தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி காத்திருந்து சாப்பிடுகிற ஒரு உணவகமாக இது மாறி விட்டது. ஒரு பக்கம் சூடு பறக்க பார்சல் சர்வீசும்,மற்றொரு பக்கம் சாப்பிட வந்த வாடிக்கையளர்களுக்கு அன்பான உபசரிப்பும் ஒரே நேரத்தில் நடக்கிறது. இங்கு சமைக்கப்படும் இட்லிக்கு ஒரு தனிப் பதமும், ருசியும் உண்டு என்பதை இங்கு வந்து சாப்பிட்டவர்கள் நன்கறிவர்.



கீழக்கரையில் காலையிலும், இரவிலும் வயிராற, பசியாற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப் போன்ற செட்டி நாடு இட்லிக் கடையின் ஸ்பெஷல் இட்லி தான். கீழக்கரையில் தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், இட்லி விற்பனை நடை பெற்றாலும், இங்கு கிடைக்கும்  இந்த இட்லியையும், கமகமக்கும் மணத்துடன் சாம்பாரையும், காத்திருந்து வாங்கி செல்வதையே மக்கள் விரும்புகின்றனர்.

நேரம் : காலை 9:15    இட்லி தீர்ந்து போச்சாம்...







கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே (நகராட்சி கட்டிடத்திற்கு அருகாமையில்) உள்ள ஒட்டுக் கட்டிடத்தில் கடந்த 47 வருடங்களாக இந்த செட்டியார் இட்லிக் கடை படு பிசியாக இயங்கி வருகிறது. காலம் சென்ற நாகசாமி அவர்கள் உருவாக்கி சென்ற இந்த கடையை அவரது மகன் நயினார் தொடர்ந்து நடத்தி வருகிறார். காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் இரவு 10 மணி வரை கடை நடத்துகிறோம். என்று இவர்கள் சொன்னாலும் காலையிலும், இரவிலும் சரியா 9 மணிக்கெல்லாம் இட்லி விற்றுத் தீர்ந்து விடுகிறது.


கீழக்கரையில் பாஸ்ட் புட், பொரித்த சிக்கன், பீப் வகையறாக்களை தின்று சலித்துப் போன இளைஞர்களும், தங்கள் நண்பர்களுடன் இங்கு வந்து இட்லியை சுவைக்க படையெடுக்கின்றனர். மணக்கும் சாம்பாரும், 'சப்பு' கொட்ட வைக்கும் ஸ்பெஷல் சட்டினியும்,  "காம்பினேஷனாக' தரும் செட்டி நாடு இட்லிக் கடையில், அடடா...நாலு இட்லி போதும்... வயிறு நிறைந்து விடும் மொத்த செலவே ரூ.16 க்குள் முடிந்து விடும். 


இந்த செட்டி நாடு இட்லிக் கடையில் இட்லிகளை ஆர்டர் செய்து மொத்தமாக வாங்கிச் செல்வோரும் உண்டு. இந்த பாரம்பரிய கடையின் இட்லி, அறவே புளிப்பு தன்மை இல்லாததால், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோய்வாய் பட்டவர்களுக்கும், மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கிறது.

கூடுதல் தகவல் : உலகின் எந்தப் பகுதிக்குச் சென்று கீழக்கரைவாசிகள் குடியேறினாலும், அங்கெல்லாம் இட்லி சட்டியும், இடியாப்ப உரலும், இடியாப்ப தட்டும்  கூடவே பயணிக்கும். அந்த அளவு தங்களது பாரம்பரிய உணவு வகையான இடியாப்பம், மாசி சம்பல், இட்லி, சாம்பார், தோசை, சட்னியை மறப்பதில்லை என்பதை நாமும் மறுப்பதற்கில்லை.

சரி... "நயினார் அண்ணே..!  கட்டிச் சட்னியோட ஒரு நாலு இட்லி பார்சேல்..."

No comments:

Post a Comment