தேடல் தொடங்கியதே..

Saturday 5 May 2012

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டம் - கவுன்சிலர்கள் காரசார விவாதம் !

கீழக்கரை நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் 03 .05 .2012 மாலை 4 மணியளவில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா தலைமை வகித்தார். துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். 


முன்னதாக நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி சட்ட விதிகளுக்கு புறம்பானது என்றும் 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்காததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் இப்ராகிம் ஆகியோர், எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, 'கருப்பு சட்டை' அணிந்து வந்து மனு அளித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
.

இதற்கு பதிலளிக்க தலைப்பட்ட கமிஷனர், 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நகராட்சி வழிகாட்டுதல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று   தெளிவாக விளக்கி கூறியதோடு,  TAMIL NADU DISTRICTS MUNICIPALITIES ACT -1920 என்ற சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி, மேற்கோள் காட்டி பதிலளித்தார்.

அவசர கூட்டத்தில் குறிப்பிட்ட ஓரிரு பொருள் குறித்து தான் பேச வேண்டும் என்றும் 40 பொருள்கள் அவசர கோலத்தில் கூட்டத்தில் முன் வைப்பது சால சிறந்ததல்ல என்றும் பல கவுன்சிலர்களால் முன் மொழியப்பட்டது. இருப்பினும் அனைத்து பொருள்களும் நகர் மன்றத்தில் வைக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகளுக்கான பொருகள் 1 லிருந்து 36 வரை அமைதியான முறையில் 'ஜெட் வேகத்தில்' நகர்ந்தது.
 

37 ஆம் பொருளான தெரு விளக்கு பணிகளுக்கு ரூ50 லட்சம் டெண்டர் ஒப்புதலுக்கு வந்த போது, நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அவர்கள் கூறியதாவது, "இப்பணியை ஒப்பந்ததாரர் மிக குறைந்த தொகைக்கு எடுத்துள்ளார். எனவே அவர்களால் இப்பணியை சரியாக செய்ய முடியாது என்று கருதுகிறேன் எனவே மறு டெண்டருக்கு விடலாம்" என்றார்.


இந்த தருணத்தில் பேசிய 21 வது வார்டு கவுன்சிலர் ஜெயப் பிரகாஷ் அவர்கள் " குறைந்த விலையில் டெண்டரை எடுத்துள்ளவர் சரியாக பணியை செய்யவில்லையென்றால் அவர்களுக்கான பில்லுக்கு ஒப்புதல் அளிக்காதீர்கள். எனவே மறு டெண்டர் விடவேண்டிய அவசியமில்லை . குறைந்த விலையில் டெண்டர் கேட்டவருக்கே கொடுக்க வேண்டும் என்று தன்  கருத்தை தெரிவித்தார்.


இவரின் கருத்துக்கு இடிமின்னல் ஹாஜா, முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததோடு கவுன்சிலர் இடி மின்னல் ஹாஜா அவர்கள் பேசும் போது இந்த விசயத்தில் லஞ்சம் கைமாறி விட்டதாக நேரடியாக குற்றஞ்சாட்டிதோடு லஞ்சம் கைமாறவில்லையென்றால் மறுடெண்டர் விடக்கூடாது என்றார். மேலும்  அவர் போது  "ரூ 2 கோடியே 50 லட்சம் ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கைமாறியதாக பொது மக்கள் தரப்பில் பேசப்படுகிறது. அப்படி யாராவது லஞ்சம் வாங்கியிருந்தால் அவர்களுக்கு 'செய்வினை வைப்பேன்' மேலும் மக்கள் பணத்தை சுரண்டினால் அவர்கள் குடும்பம் விளங்காமல் போகும்" என சாபக் கணைகளை தொடுத்தார். 

  
இதற்கு பதிலளித்த சேர்மன் ராவியத்துல் காதரியா அவர்கள் "உங்களால் நிரூபிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நகராட்சி தலைவருக்கும் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாதம் நடைபெற்றது. கவுன்சிலர்கள் அஜ்மல் கான், சுரேஷ் ஆகியோர் மறு டெண்டருக்கு ஆதரவாக பேசினர். 


 பின்னர் இறுதி முடிவாக மறு டெண்டர் தேவையில்லை ஏற்கெனவே குறைந்த பதிப்பீட்டு புள்ளிகளை நிர்ணயித்துள்ள ஒப்பந்ததராருக்கே இப்பணியை வழங்கலாம் என்று நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா அறிவித்தார். இதனையடுத்து இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததுடன் நகர் மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment