தேடல் தொடங்கியதே..

Thursday 12 July 2012

கீழக்கரையில் கார் விபத்தில் காலமான செய்தி- விபத்துக்களும், விழிப்புணர்வுகளும் !

கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் ஜனாப். N.D.M.முஹம்மது காசீம் மரைக்காயர் அவர்களின் மகனும் ஜனாப். சித்தீக் தம்பி அவர்களின் மருமகனுமாகிய யாசீன் சுப்யான் அவர்கள் காரில், தஞ்சாவூரிலிருந்து  கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, நடு இரவு சுமார் 2 மணியளவில் தொண்டி அருகிலுள்ள உப்பூர் அருகே வாக‌ன விப‌த்தில் வபாத்தாகி விட்டார்கள் .

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.)


அன்னாரின்  ஜனாஸா இன்று (12.07.2012) மேலத் தெரு புதுப்பள்ளி மைய வாடியில் இஷா தொழுகைக்குப் முன்னர் 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் மஹ்பிரத்துக்காகவும்,  ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவி கிடைக்கவும், அன்னாரின் பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு சபூர் தன்மை கிடைக்கவும் படைத்த வல்ல ரஹ்மானிடத்தில் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


விபத்துக்களும், விழிப்புணர்வுகளும் ! 

மீபகாலாமாக விபத்துக்களை பற்றி கேட்கும் போதே கண்களில் நீர் வருகிறது. அந்த அளவிற்கு விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு முன் விபத்துக்கள் எல்லாம் லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதல் என்றும் சாலையோர மரத்தில் மோதியது என்றும் தான் அதிகம் நடந்து கொண்டு இருந்தது.

ஆனால் தற்போது இரவு நேரங்களில் தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில், நின்ற லாரியில் மீது வாகனங்கள் மோதி உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.... நேற்று நடந்த விபத்தின் சாரமும் அப்படித்தான் தெரிவிக்கின்றது. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணமாக, தூக்கம் இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதும் அடங்குகிறது.

ஒருவேளை லாரி முழுச் சுமையுடன் இருக்கும் போது, டயர் வெடித்து ரோட்டில் நின்றால் அதை எப்படி ஓரம் கட்டுவது.?? உண்மைதான் அதை ஒரம் கட்ட முடியாது தான்.. ஆனால்  லாரி பழுதாகி  நின்று விட்டது என்று பத்து மீட்டருக்கு முன் அறிவிப்பாக இரவு நேரத்தில் ஒளிரும் முக்கோண பிரதிபலிப்பான் (ரிப்ளெக்டர்) வைக்க வேண்டும்.. ஆனால் பழுதாகி நின்ற எந்த லாரிக்கு பின்னாலும் இப்படிபட்ட அறிவிப்பை நாம் எங்கும் பார்க்க முடிவது இல்லை...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது வேகத்தையும், தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. தவிர, எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும். இதனால் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில், விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும், பார்வை திறனும் கிடைப்பதில்லை. வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, இரவு நேர பயணங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...


இரவு நேரங்களில் பாதுகாப்பான நெடுந்தூர பயணங்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள் 

•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும், தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும் போது, டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம். அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால், வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது. கார் வாங்கும் போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின் போது முகப்பு கண்ணாடிகள், முகப்பு விளக்குகள், பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம், ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்து விடக்கூடும்.

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள். மேலும், பின்தொடரும் போதும், எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும், அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால், வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால், பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்தி விட்டு குட்டி தூக்கம் போடுங்கள். அதன்பின், முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும், முன்னால் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம். இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம். இது போன்று ஓவர்டேக் செய்வதால் தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் இரவு பயணமும், (இறைவன் நாடினால்) மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

1 comment:

  1. அருமையான தகவல் ஏங்கே நம் மக்கள் கடைபிடிக்கபோகிறார்கள்.தகவலுக்கு நன்றி.

    ReplyDelete