தேடல் தொடங்கியதே..

Sunday 2 September 2012

கீழக்கரையில் 'ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான பணிகள் தீவிரம் - ஆர்வமுடன் பதியும் பொதுமக்கள் !

கீழக்கரையில் ஆதார் என்று அழைக்கப்படும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக தகவல் சேகரிக்கும் பணிகள் நேற்று துவங்கியது. கீழக்கரை நகரில் இதற்கென பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களில் அதற்கான பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தங்கள் தகவல்களை அளித்த வண்ணம் உள்ளனர். 

'ஆதார்' - தேசிய அடையாள அட்டை ஏன் ? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகத் தான் இந்த தேசிய அடையாள அட்டை இருக்கும்.


ஏனெனில் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க இந்திய தேசிய ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி என்பவர் இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

முதன்மை அட்டை

நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். அது மட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும் போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

 
அடையாள அட்டையில் என்ன இருக்கும் ?

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

கீழக்கரையில் 'ஆதார் அட்டை' பெற எங்கு செல்ல வேண்டும் ?

கீழக்கரையில்  இந்த முகாம்கள் எங்கெங்கு நடை பெறும்  என்பதை துவங்கி நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 

ஆக 30 முதல் செப் 2 வரை 1, 2, 6 ஆகிய வார்டுகளுக்கு மறவர் தெரு ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,

செப் 2 முதல் 5 வரை 3, 4, 5 வார்டுகளுக்கு கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியிலும்,

செப் 6 முதல் 8 வரை 7, 8, 9, 10 ஆகிய வார்டுகளுக்கு மஹ்தூமியா பள்ளியிலும்,

செப் 9 முதல் 11 தேதி வரை 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்கு மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 12 முதல் 14 வரை 15, 16, 17 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு தெற்குதெரு இஸ்லாமியா தொடக்கப்பள்ளியிலும்,

செப் 15 முதல் 17 வரை 18, 19 ஆகிய வார்டுகளுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும்,

செப 18 முதல் 20 வரை 20, 21 வார்டுகளுக்கு வடக்குதெரு சிஎஸ் ஐ பள்ளியிலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.
 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி, இருப்பிடச் சான்றிதழ், சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு http://uidai.gov.in/ என்ற இணைய
தள முகவரியை சொடுக்கி பார்வையிடலாம்.

No comments:

Post a Comment