தேடல் தொடங்கியதே..

Friday 7 September 2012

கீழக்கரையில் பாலிதீன் குப்பைகளுக்கு தீ வைக்கும் கும்பல் - பாதிப்பை எதிர் நோக்கும் பள்ளிக் குழந்தைகள் !

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பள்ளிச் சாலைகளில் பாலிதீன் அதிகம் நிறைந்த குப்பைகள் கொட்டிக் குவிக்கப்படுகிறது. சமீப காலமாக முகம் தெரியாத ஒரு கும்பல், இந்த குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து சென்று விடுகிறது. இதனால் கிளம்பும் துர்நாற்றம் மிகுந்த கரும் புகையால் அந்த பகுதியை கடக்கும் பள்ளிக் குழந்தைகளும், பொது மக்களும் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதுடன் சுற்றுப்புற சூழலும் வெகுவாக பாதிப்படைகிறது.

 கைராத்துல் ஜலாலியா மேனிலைப் பள்ளி நுழைவாயில்

பருத்திகாரத் தெரு ரைஸ் மில் அருகாமையில் நச்சுப் புகை

கிழக்குத் தெரு கைராத்துக் ஜலாலியா மேனிலைப் பள்ளியினை சுற்றி கொட்டபட்டிருக்கும் குப்பைகளுக்கு  வைக்கப்படும் நெருப்பால், குப்பைகள் தொடர்ந்து பல மணி நேரம் வரை எரிகிறது. இதன் மூலம் அந்த வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள் பலரும் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தோய்ந்த குரலில் தெரிவிக்கின்றனர். தொடர் புகை காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

இது குறித்து பருத்திக்கரத் தெருவைச் சேர்ந்த தாஹா உம்மாள் அவர்கள் கூறும் போது "இது போன்ற தீ வைப்பு செயல்களை செய்பவர்கள், கீழக்கரை நகராட்சியின் துப்பரவுப் பணியாளர்கள் தான். குப்பைகளை அப்புறப் படுத்துவதற்கு முனையாமல், வேலையை மிக சுருக்கமாக முடிப்பதற்காக, 'ஒரே தீக்குச்சியில் குப்பைகளை அழித்து  சாதனை' படைத்து சென்று விடுகின்றனர். சமீபத்தில் நகராட்சி குப்பைகளை விரைந்து அகற்ற மூன்று சக்கர மிதி வண்டிகள் வாங்கி பயனில் உள்ளதாக அறிகிறோம். ஆனால் இங்கு அவர்கள் தங்கள் வேலையை முறைப்படி செய்யாமல், பணி ஏய்ப்பு செய்து வருகின்றனர். புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் கமிசனர் அவர்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த வேளானூர் அரசு மருத்துவர் டாக்டர்.ராசிக்தீன் அவர்கள் கூறும் போது, "கீழக்கரையை பொருத்தமட்டில் சட்டத்துக்கு புறம்பாக, பாலிதீன் குப்பைகளை எரிப்பது எல்லா இடத்திலும் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இவற்றை எரிக்கும் போது புற்றுநோயை உருவாக்கக்கூடிய டையாக்சின் எனப்படும் கொடிய நச்சுப்புகை வெளியாகிறது. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை பொதுமக்கள் உணர்வதில்லை. இந்த நச்சுப் புகையால் புற்றுநோய், இனப்பெருக்க கோளாறுகள், மனநிலை பாதிப்பு, நோய் எதிர்ப்புத்திறன் குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும், மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை பொது மக்கள் கை விட வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.


பிளாஸ்டிக் எரிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த போதிய விழிப்புணர்வு பொது மக்களிடையே இல்லை. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நோய்கள் அதிகரிக்கும் என்பதை பொதுக்களுக்கு விளக்கும் வகையில் நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களுக்கு அருகாமையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுத்து, குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 comments:

  1. கீழக்கரையில் 'ஒரே தீக்குச்சியில் குப்பைகளை அழித்து சாதனை' - நகராட்சி துப்புரவு பணியாளர்களின் புதிய பணி ஏய்ப்பு ! (இந்த செய்திக்கு இப்படி தலைப்பிட்டாலும் தவறில்லை)

    ReplyDelete
  2. பருத்திக்காரத் தெரு சகோதரி தாஹா உம்மாள்சொல்லுவது முற்றிலும் உண்மை.. இதை நானும் ஒரு நாள் கண்கூடாக பார்த்தேன். பழைய மின் கடைக்கு செல்லும் போது காலை சுமார் பத்து மணி அளவில் ஐந்து வாசல் கிட்டங்கிக்கு செல்லும் பாதையில் துப்பரவு பணியாளரே எரித்துக் கொண்டு இருந்தார்.

    மருத்துவர் ராசீக்தீன் அவர்கள் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்.பொது மக்கள் மீது பழியை திருப்ப பார்க்கிறார். அவர்களை போன்றவர்கள் சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னால் அம்பலத்தில் ஏறும்.பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

    இது வேலியே பயிரை மேய்ந்த கதை.மேலாளர் திரு. மனேகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார். அதுவும் பள்ளி வளாக நுழைவு வாயில் அருகிலேயே!!!! அசம்பாவிதம் சம்பவித்த பிறகுதான் இவர்களெல்லாம் செயல் படுவார்களே? வரும் முன் காப்போம் என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை வெத்து கோஷங்கள் தானே????

    இனியாவது ஆணையர் அவர்கள் துப்புரவு பணியாளர்களிடம் தகுந்த உத்தரவுகளை ஆணையிட்டு மருத்துவர் ராசீக்தீன் அவர்கள் கூறுவது போல மக்களை வியாதியின் கோரர்ப்பிடியில் சிக்காமல் காக்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. பருத்திக்காரத் தெரு சகோதரி தாஹா உம்மாள்சொல்லுவது முற்றிலும் உண்மை.. இதை நானும் ஒரு நாள் கண்கூடாக பார்த்தேன். பழைய மின் கடைக்கு செல்லும் போது காலை சுமார் பத்து மணி அளவில் ஐந்து வாசல் கிட்டங்கிக்கு செல்லும் பாதையில் துப்பரவு பணியாளரே எரித்துக் கொண்டு இருந்தார்.

    மருத்துவர் ராசீக்தீன் அவர்கள் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார்.பொது மக்கள் மீது பழியை திருப்ப பார்க்கிறார். அவர்களை போன்றவர்கள் சொல்ல வேண்டியவர்களிடம் சொன்னால் அம்பலத்தில் ஏறும்.பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

    இது வேலியே பயிரை மேய்ந்த கதை.மேலாளர் திரு. மனேகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார். அதுவும் பள்ளி வளாக நுழைவு வாயில் அருகிலேயே!!!! அசம்பாவிதம் சம்பவித்த பிறகுதான் இவர்களெல்லாம் செயல் படுவார்களே? வரும் முன் காப்போம் என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை வெத்து கோஷங்கள் தானே????

    ReplyDelete