தேடல் தொடங்கியதே..

Friday, 7 June 2013

கீழக்கரை சமுதாயப் புரவலர் 'மர்ஹூம். எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்' அவர்களின் 'இம்மையின் இறுதி சந்திப்புகள்' - முதுவை ஹிதாயத் அவர்கள் தரும் உருக்கமான தகவல் !

முனைவர்.செ.மு. ஹமீத் அப்துல் காதர் காக்கா அவர்களின் 'இம்மை உலகின் இறுதி சந்திப்புகள்' குறித்து முதுவை ஹிதாயத் அவர்கள் தன் முகப்புத்தகத்தில் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் பின் வருமாறு :


முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமீத் அப்துல் காதர் அவர்கள் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் ( வயது 81 ) அவர்கள் அலுவல் நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த போது 06.06.2013 வியாழக்கிழமை மாலை 6.48 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) 

ஹமித் அப்துல் காதர் காக்கா அவர்கள் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படம். 
'புது தில்லியில் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர்' இதன் விபரம் வருமாறு : 

அதிகமான சமுதாயக் கல்வி நிறுவனங்கள் இருந்தும் நம் சமுதாயத்திற்கென 'ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே..' என்ற ஆதங்கத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார். இம்மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திருமிகு கே. ரஹ்மான் கான் அவர்களை சந்திக்க தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி 05.06.2013 புதன்கிழமை சந்திப்பு நிகழ்வினை எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் சிறப்புடன் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்தார் அமைச்சர் ரஹ்மான் கான். மருத்துவமனை திறப்பு விழாழ்வில் தான் நிச்சயம் பங்கேற்கிறேன் என்ற உறுதியினையும் அமைச்சர் ரஹ்மான் கான் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில் இந்திய துணை ஜனாதிபதி திருமிகு. ஹமீது அன்சாரியினை மரியாதை நிமித்தமாக அல்ஹாஜ். செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்தார். துணை ஜனாதிபதி அவர்களும் அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்து விட்டு 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனடியாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்றடைந்ததும் நெஞ்சுவலி அதிகமாகி உயிர் பிரிந்தது. அன்னாரது ஜனாஸா சென்னைக்கு கொண்டு வருவதற்கான பணியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். வியாழன் நள்ளிரவு அல்லது வெள்ளிக்கிழமை காலை சென்னை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அன்னாரது மறைவிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ அனைவ‌ரும் துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். 

குறிப்பு : முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முதலாவது தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசிப் புகைப்படம் : மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் அவர்களுடன் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமே.. கடைசிப் புகைப்படம். 

தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள்  -- MUDUVAI HIDAYATH

No comments:

Post a Comment