தேடல் தொடங்கியதே..

Thursday, 6 June 2013

கீழக்கரையில் வாரம் தோறும் நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம் - துபாய் ETA குழுமத்தின் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT)' சிறப்பான சாதனை !

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ETA  குழுமத்தின் மற்றுமொரு சிறப்பான சேவையாக, இராமநாதபுரம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட  'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' (CWT), ஏழை எளிய மக்களின் ஆரம்ப மருத்துவ உதவிகளை அயராது செய்து வருகிறது. இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.  

இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு,  திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர். இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு,  இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. இந்த டிரஸ்ட் ETA குழுமத்தின் அக்பர் கான் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இது குறித்து  கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்டின் இராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர். பைசுல் ரஹ்மான் அவர்கள் கூறும் போது "நம் மாவட்டத்தின் ஏழை, எளிய மக்களுக்கு ஆரம்ப மருத்துவ உதவிகளை அளிக்கும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டு, கடந்த 5 மாத காலமாக தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் வாரம் தோறும் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் தெற்குத் தெரு முஸ்லீம் பொது நல சங்க வளாகத்திலும், மற்றொரு வாரம் 500 பிளாட் பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த முகாமில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் இலவசமாக, தரமான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.  ஏராளமான ஏழை மக்கள் இதில் பயன் பெற்று செல்வதை காணும் போது உளம் மகிழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ். எங்கள் அறக்கட்டளையின் மருத்துவக் குழுவை சேர்ந்தவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சென்று தினமும் முகாம்களை நடத்தி சேவையாற்றி   வருகின்றனர். தற்போது அறகட்டளை சார்பாக நம் மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, பெங்களூரு போன்ற பகுதிகளிலும் இலவச மருத்துவ சேவைகள் சிறப்பாக் நடை பெற்று வருகிறது. கீழக்கரையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த முகாமை, அனைத்து தரப்பு மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீழக்கரை மட்டுமல்லாது நம் மாவட்டம் முழுவதும் தொடர் மருத்துவ சேவை செய்து வரும்  'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' அங்கத்தினர்களுக்கு, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். 

No comments:

Post a Comment