தேடல் தொடங்கியதே..

Saturday 8 June 2013

'கீழக்கரை நகர் நல இயக்கம்' சார்பாக பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளில் முதன்மை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சிறந்த பள்ளிக்கான விருதுகள் அறிவிப்பு !

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக மிக அரிது. கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும், கல்வி 'கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு' என்பதையும், காலம் காலமாய் வேதங்கள் வழியாகவும், காப்பியங்கள் வழியாகவும் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மார்க்கம், கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் அவசியமான ஒன்று என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. 'சதக்கத்துன் ஜாரியா' என்கிற இந்த நிலையான தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு, கல்வி கற்பவர்களுக்கு உதவுவதும், கல்வியை வழங்குவதற்கு முயற்சி செய்வதும், கல்வி கற்பவர்களை ஊக்குவிப்பதும் மிகப் பெரிய நல் அமலாக இருக்கிறது. 


இதையெல்லாம் கருத்தில் கொண்டு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, கீழக்கரை நகரில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் முகமாக, இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில், கீழக்கரை நகரில் முதன்மை பெறும் மாணாக்கர்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் கல்வி வழங்கி வரும் ஒரு பள்ளிக்கு ஆண்டு தோறும் சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்க இருக்கிறார்கள்.


பட விளக்கம் : கீழக்கரை முதல்வன் விருதுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் கலந்துரையாடலின் போது, (இடமிருந்து வலமாக) கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, தலைவர். செய்யது இபுறாஹீம் மற்றும் உறுப்பினர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுராஹீம் (இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்கள் கூறும் போது "ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக,எதிர்கால தூண்களாக நம் இளைய சமுதாயம் திகழ்வதற்கு கல்வி எனபது அத்தியாவசியமாக இருக்கிறது.நம் கீழக்கரை மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி என்பது, சாதாரணமாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வியாக இருக்கக் கூடாது.

இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும் (value Based Education). ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க பள்ளிகளுக்கு அனுப்புவதோடு வீட்டில் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பள்ளிகளில் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் நற்குடிமக்களாக,பெற்றோரைப் பேணுபவர்களாக,சுற்றத்தாரை மதிப்பவர்களாக, அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முயல் வேண்டும். 

ஆகவே தான் கீழக்கரை நகரில் இந்த வருடம் முதல் சிறந்த பள்ளிக்கான விருதும், பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, அடுத்த மாதம் விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் விருதுகள் வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதன்மை விருதுகள் வழங்குவதன் மூலமாக, கீழக்கரை நகரில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை மென் மேலும் சிறப்பாக செயல்பட வைக்க முனைவதுடன் மாணவ, மாணவிகளையும் சாதனைகளின் பக்கம் முடுக்கி விட முடியும் என தீர்க்கமாக நம்புகிறோம்." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

1 comment:

  1. உண்மையிலேயே முன் மாதிரியான முயற்சி. செயல் ஆக்கம் பெற உளமார்ந்த் வாழ்த்துகள்.

    இத்துடன் அடியேனின் ஒரு சிறிய யோசனை சமர்பணம். மத்திய, மாநில அரசுகளின், மற்றும் இஸ்லாமிய அற்க்கட்டளைகளின் சார்பில் சிறுபான்மை மக்களுக்காக வழங்கும் கல்வி உதவித் தொகைகள் நமதூர் இஸ்லாமிய மற்றும் தகுதி உடையவர்களுக்கு கிடைக்க, வழி முறைகளை திரட்டி தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். இது சம்பந்தமாக மாணவச் செலவங்களுக்கு அறிவுருத்த,உதவ தாளாளர்களின் ஒத்துழைப்பையும் நாட வேண்டும்.

    நமது மாவட்ட ஆட்சியாளர் கூட இது போன்ற உதவித் தொகைகளை வழங்குகிறார்.

    படிக்க ஆர்வமுள்ள ஏழை மாணவச் செல்வங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பு பேருதவியாக இருக்கும்.

    ReplyDelete