தேடல் தொடங்கியதே..

Monday 2 September 2013

இன்று (02.09.2013) சர்வதேச 'தேங்காய் தினம்' - கீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம் பற்றி ஒரு அலசல் !

ஒரு காலத்தில் பசுமை வெளிகளாக காட்சி தந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்று வீட்டு மனைகளாக கூறு போடப்பட்டு, கட்டிடங்கள் முளைத்த கான்கிரீட் காடுகளாகி விட்டது. ஏர் பிடித்த விவசாயிகள், எல்லாம் ஏரோபிளேன் ஏறி, ஊரை மறந்து விட்டார்கள். 

இனி வரும் காலங்களில் விவசாயம் வரலாற்றுப் பாடங்களிலும், விவசாயி புகைப் படங்களிலும் மட்டும் ஆவணப் பதிவாக கண்டெடுக்கப்படும் அவல நிலையே உள்ளது. அந்த அளவிற்கு விவசாய விளை பொருள்களின் வீழ்ச்சியும், உற்பத்திக் குறைவும் காணப்படுகிறது. அவற்றுள் தென்னை விவசாயம் விக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி பயணித்து வருகிறது. 








இடம் : கோக்கா அஹமது தெரு, கீழக்கரை 

"பெற்ற பிள்ளை கை விட்டாலும், தென்னம் பிள்ளை வாழ வைக்கும்" என்ற பழமொழி, இன்றும் கிராமத்தினரிடம் காணலாம். அந்த வகையில், விவசாயிகளிடையே நம்பிக்கையை வளர்த்து வந்த தென்னை மரங்கள், இன்று, அந்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல், தாங்களையும் காத்துக் கொள்ள முடியாமல் நிலை குலைந்து நிற்கிறது. 

கடும் வறட்சி, நிலத்தடி நீர் வறண்டு போதல், தேங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்காமை, தென்னைக்கு ஏற்படும் (செம்பான் சிலந்தி) வினோத நோய்கள், காண்டாமிருக வண்டுகளின் அட்டூழியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் நாளுக்கு நாள், தென்னைகளின் எண்ணிக்கையும், படிப்படியாக குறைந்து, உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனால் வேறு வழியின்றி தென்னை மரங்கள் வெட்டப்பட்டு, விலை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்கும் நல்ல நோக்கோடு தென்னை சாகுபடியை அதிகரிக்கவும், ஏழை விவசாயிகளின் வறுமை குறைப்பில் உயிர் நாடியாக விளங்குகின்ற தென்னை  பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே மேலதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டும், 

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவினை தலைமையகமாகக்  கொண்ட ஆசிய பசுபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் தலைமையகம் 1998ம் ஆண்டு வியட்னாம் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில், செப்டம்பர் 2 ஆம் தேதி, சர்வதேச தேங்காய் தினமாக ( International Coconut Day,  September 2 ) பிரகடனம் செய்யப்பட்டது. இந்தத்தினத்தில் தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 








இடம் : மாலா குண்டு அருகாமை, கீழக்கரை 

1960-களிலே மத்திய, மாநில அரசுகள் எண்ணெய் வித்துகளை ஊக்குவிப்பதற்காக முதன் முறையாக இராமநாதபுரம் மாவட்டத்திலே, தென்னை விவசாயம் தொடங்கப்பட்டது. கீழக்கரை, காஞ்சிரங்குடி, ரெகுநாதபுரம், தாமரைக்குளம், பெரியப்பட்டணம், மாயாகுளம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் 10000 ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 900 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பான கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் இதுவரை இங்கே தொடங்கப் படவில்லை

கீழக்கரை, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, உள்ளிட்ட பகுதிகள் தென்னந் தோப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. ஆயிரக்கனக்கானோர் தங்கள் வாழ்வாதாரமாக இதையே நம்பியுள்ளனர். கீழக்கரையில் காய்க்கும் தேங்காய்கள், ருசி மிகுந்ததாக இருப்பதால், தேங்காய்க்கு பெயர் போன பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக கீழக்கரைக்கும், வெளி மார்க்கெட்டில் மவுசு அதிகம் இருந்து வருகிறது.

 ஆண்டுதோறும் லட்சக்கணக்கான‌ தேங்காய்கள் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு ஏற்றுமதியாகி வந்தன. ஆனால் தென்னை விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏற்படும் பல்வேறு சிரமங்களால் பெரும்பாலானோர் தென்னை விவாசாயத்தை விட்டு வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


'தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்கிற பேச்சு வழக்கு தற்போது தென்னைக்கும் சேர்த்தே உண்மையாகி வருகிறது. தற்போது கீழக்கரை பகுதியில் மழை பொலிவு இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால், நீர்பிடிப்பான பகுதிகளில் கூட, நிலத்தடி நீர் இன்றி, தென்னை மரங்கள் கருகி வருகின்றன. 

பல ஆண்டு பாடுபட்டு வளர்த்த மரங்கள், கண்முன்னே கருகுவதால், விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். கொளுத்தும் வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நிலத்தடி நீர்மட்டம் வற்றியதால், நீர்பாய்ச்ச வழியின்றி, கடந்த சிலமாதங்களாகவே மரங்கள் வாடி நின்றன. முதலில் காய்ப்புத் திறனை இழந்த மரங்கள், அதன் பின்னர் மட்டைகள் ஒவ்வொன்றாக உதிர, தற்போது, முற்றிலுமாக கருகி வருகின்றன.


கீழக்கரை பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு, தென்னை மரங்கள் தற்போது அழிவை சந்தித்து வருகின்றன. வெளி மாநிலங்களுக்கு எல்லாம் தேங்காய்கள் அனுப்பப்பட்டு வந்த நிலை மாறி, உள்ளூர் தேவைக்கே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது போதாதென்று காண்டாமிருக வண்டு என்று அழைக்கப்படும் மெகா சைஸ் வண்டுகள், தென்னையின் கருத்துகளை ஸ்ட்ரா போட்டு உறிந்து விடுவதால் மரம் கைப்பு இல்லாமல் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க நேரிட்டால் அத்தொழிலிருந்து விலகி தற்போது மிஞ்சியிருக்கும் தென்னந்தோப்புகளும் அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயத்துறை அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். வறட்சி காலங்களில் எவ்வாறான தற்காப்பு முறைகளை கையாள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

"தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயால் ஏற்படும் ஒரே ஒரு பக்க விளைவு, நல்ல உடல் நலம்..!"

இது தென்னை வளர்ச்சி வாரியத்தின் (வேளாண் அமைச்சகம், இந்திய அரசு) விளம்பர வாசகம்..! இது நெகடிவ் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் நல்ல விஷயம்...! ஆகவே நம் பகுதியில் அழிவு நிலையில் இருக்கும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வண்ணம் நாமும், இயன்ற முயற்சியை மேற்கொள்வோம். தென்னம் பிள்ளையை வாழ வைப்போம்..

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்2 September 2013 at 22:42

    பல ஆண்டுகளுக்கு முன் யூசுப் சுலைஹா மருத்துமனைக்கு முன் புறமாக மர்ஹூம் அபூ சாலிஹ் ஹாஜியார் அவர்களால் டீலக்ஸ் கோகனட் பேக்டரி ஒன்று துவக்கப்பட்டது. அதில் தேங்காய் எண்ணெய், உலர் தேங்காய் துருவல்,சிரட்டையிலிருந்து பேக்லைட் என்ற ரசாயனப் பொடி போன்றவை தயாரிக்கப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தால் மூடு விழா கண்டது.

    அங்கு தயாரிக்கப்பட்ட உலர் தேங்காய் துருவல் அனைத்தையும் வாங்க பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி ஒப்பந்தம் செய்து கொண்டது.அதை அவர்களின் தயாரிப்பான நைஸ் பிஸ்கட்டில் பயன் படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு சர்வ தேச தரம் வாய்ந்தது. காரணம் கீழக்கரையில் விளைந்த தேங்காயின் தன்மை,ருசி,தரம் அப்படி பட்டது.

    இதெல்லாம் மலரும் நினைவுகள். இப்போது கீழக்கரையில் தென்னை விளைச்சலை நினத்தால் கண்ணீர் தான் மிஞ்சும்.

    ReplyDelete