தேடல் தொடங்கியதே..

Sunday 1 September 2013

கீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

கீழக்கரை நகரில் சமீப காலமாக, ஆதரவற்று சுற்றித் திரியும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அழுக்கைடந்த பழைய ஆடைகளுடன், பரட்டை தலையுடனும், கந்தல், கிழிசல்களை தோரணங்களாகத் தொங்க விட்டவாறு நடைபாதை ஓரங்களிலும், புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் அலங்கோலமான நிலையில், உண்ண உணவின்றி நகரெங்கும் திரியும் இந்த ஜீவன்களை காணும் போது மனம், ஒரு கணம் வேதனையில் விம்மித் தான் போகிறது. 



பிறப்பாலும், விபத்துகளாலும் மன நிலை பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்திருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை, வீட்டில் வைத்து பார்க்க முடியாமல், ஏர்வாடி தர்ஹா கொடியேற்றம், சந்தனக் கூடு போன்ற திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கூட்டத்தில் கைவிடப்படும் அவலமே பெரும்பாலும் நடந்தேறுகிறது.  மேலும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை ஏர்வாடிக்கு அழைத்து வரும் குடும்பத்தினர், இனி இறைவன் விட்ட வழியென்று கருதி அவர்களை கீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையிலும் அனாதையாக விட்டு சென்று விடுகின்றனர்.

இவ்வாறு சொந்தபந்தங்களால் கைவிடப்படும் அவர்கள், அன்னதானக் கூடங்களும், தண்ணீர் பந்தல்களும் அதிகம் நிறைந்த ஏர்வாடி தர்ஹாவில் உண்ண உணவின்றி, வீதிகளில் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான உறைவிடம் இல்லாததால் குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால்களுக்கு அருகில் படுத்துறங்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், சில நேரங்களில் நாய்களாலும், குடி போதையில் திரியும் சிலராலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

கடந்த ஆண்டு கீழக்கரை நகர் மற்றும் ஏர்வாடி பகுதிகளில் சாலையில் திரிந்து கொண்டிருந்த 13 மன நோயாளிகளை காவல் துறையினர் பிடித்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் கீழக்கரை நகர வீதிகளில் கேட்பாரற்று சுற்றித் திரியும் மன நோயாளிகள் குறைந்தபாடில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு ஏர்வாடி தர்ஹாவில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அந்த காப்பகத்தில் இருந்த 28 மனநல நோயாளிகள் கருகி இறந்து போனார்கள். 

 இது குறித்து நடவடிக்கை எடுத்த அரசு அங்கு அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வந்த அனைத்து மன நல காப்பகங்களும் முடபட்டன. இதனால் அங்கே இருந்த 300க்கும் அதிகமான மன நோயாளிகளை அவர்களது உறவினர்கள் தங்கள் வீடுகளுக்குஅழைத்துச் சென்று விட்டார்கள். மீதமிருந்த மன நோயாளிகள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்பிரச்னையில் அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி மாவட்ட மருத்துவமனையில் மனநல பிரிவு தொடங்க, நீதி மன்றம் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், ஏர்வாடியில் அரசு காப்பகம் இல்லாததால் அது பயனற்று உள்ளது.  ஏர்வாடி த‌ர்ஹாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ன‌ ந‌ல காப்ப‌க‌ம் அமைப்ப‌த‌ற்கு அரசுக்கு இட‌ம் த‌ருவ‌தாக‌ அறிவித்து நீண்ட‌ கால‌மாகி விட்ட‌து. ஆனால் மனநல காப்பகம் அமைப்பதற்கு அர‌சு எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை. விரைவில் அர‌சு ஏர்வாடி த‌ர்ஹாவில் ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம் அமைக்கப்பட்டால் இது தொட‌ர்பான‌ ப‌ல்வேறு பிர‌ச்ச‌னைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.

இது குறித்து சமூக ஆர்வலர்.ரோட்டரியன் இஞ்சினியர் ஆசாத் ஹமீத் அவர்கள் கூறும் போது " ஏர்வாடி தர்காவுக்கு வந்தால் சுகமாகும் என நம்பி அனைத்து சமூக மக்களும், மன நலம் பாதிப்புக்குள்ளானவர்களை அழைத்து வருகின்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி வயதான பெரியோர்களையும், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோரையும் அழைத்து வந்து தர்ஹாவில் அனாதைகளாக விட்டு விட்டு சென்று விடுகின்றனர். 

அவர்கள் படும் வேதனைகள் கல் நெஞ்சம் படைத்தோரையும் கண்ணீர் சிந்த வைக்கும். அவர்களில் பலர் பெண்களாக இருப்பதால், கயவர்களின் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். தற்போது கீழக்கரை நகருக்குள் இது போன்ற மன நோயாளிகளின் வரவு அதிகமாகி இருக்கிறது. எனவே தமிழக அரசு தாய்மை உள்ளத்தோடு ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைத்து தர வேண்டும். அது மட்டுமல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்பும், சேவைமனப்பான்மை உள்ளவர்களும் முன் வர வேண்டும்." என்று மனிதாபிமான அக்கறையுடன் தெரிவித்தார்.

                        படங்கள் : ரோட்டரியன் இஞ்சினீயர். ஆசாத் ஹமீத் அவர்கள் 

FACE BOOK COMMENTS : 
  • தங்கராசு நாகேந்திரன் அதை ஏர்வாடியில் தான் ஆரம்பிக்க வேண்டுமா இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆரம்பித்து பராமரித்தால் போதும் ஏன் எனில் ஏர்வாடி என்றாலே பைத்தியம் தான் என்ற பெயரை மாற்றலாம் தானே
  • Jagadhesh Siva kantipa. ivangalum nammai pola uyier ulla jevan thane? ivangaluku mattum yen ipati oru nilamai?????????????

No comments:

Post a Comment