தேடல் தொடங்கியதே..

Wednesday 4 September 2013

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீட்டு 'புதிய அடையாள அட்டை' வழங்கும் பணி தினமும் நடை பெறுகிறது - விண்ணப்பித்து உடனடியாக பெறலாம் !

தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஒரு சில மருத்துவத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் சிகிச்சை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,016 நோய் சிகிச்சைகளும், 23 வகையான நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சோதனைகளும் செய்யப்படுகின்றன. 



இதற்காக மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பலர் அடையாள அட்டை எடுக்காமல், கடைசி நேரத்தில் பெரும் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை களையும் நோக்கோடு, இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி தினமும் நடைபெற்று வருகிறது.



கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு பின்னர் அங்கிருந்து பெறப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் அச்சிடும் பணி துவக்கப்பட்டுள்ளதால் புகைப்படம் எடுத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே அடையாள அட்டை அச்சிட்டு வழங்கப்படுகிறது.


இது குறித்து மாவட்ட கியாஸ்க் அதிகாரி திரு.நாக குமார் அவர்கள் கூறும் போது  "இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலக அறை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அடையாள அட்டை அச்சிடுவதற்காக புதிதாக நவீன இயந்திரம் அமைக்கப்பட்டு புதிய அடையாள அட்டை அச்சிட்டு வழங்கும் பணிதுரிதமாக நடை பெற்று வருகிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள், இங்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து உடனடியாக பெற்று செல்லலாம். 

விண்ணப்பிக்க வரும் போது மறக்காமல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்ற வருமான சான்றிதழை கொண்டு வர வேண்டும்." என்று தெரிவித்தார்.

                                 தகவல் தொடர்புக்கு : திரு.நாக குமார் - 7373004860

No comments:

Post a Comment