தேடல் தொடங்கியதே..

Sunday 22 September 2013

கீழக்கரை நகரில் 'விடுமுறை தினங்களில் ' விளையாட்டு மைதான வளாகங்களுக்குள் விளையாட அனுமதிக்குமாறு வேண்டுகோள் !

'ஓடி விளையாடு பாப்பா ! கூடி விளையாடு பாப்பா !!' என்னே வரிகள், முண்டாசு கவிஞன் பாரதியின் அரைகூவல். ஆனால் இன்று மாணவ மணிகளின் பதிலுரை பாடலோ... பாரதியே! வழி நெடுகிலும் வாகனம், வழியோரத்தில், ஜல்லியும், மணலும், பள்ளிக்கூடமும் விடுமுறை. நான் எங்கு சென்று விளையாடுவேன்?” என்பதாக இருக்கிறது. மாணவர்களே, உங்களுக்கு பிடித்த “ஸ்கூல் பீர்யட்” எது? யோசிக்காமல் பதில் சொல்வர் “விளையாட்டு பீரியட்” என்று.. ஆம்... மாணவப் பருவத்தில் விளையாடாமல், எப்பொழுது விளையாட முடியும்.



நம் ஊரின் ஒவ்வொரு விளையாட்டு மைதானமும் பள்ளிகளைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் பள்ளி நேரங்களில் அதிக நேரங்கள் பாடத்தில் செலவிடும் மாணவர்கள், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தான் அதை விளையாட்டுக்காக பயன்படுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் விஷேச அனுமதியின்றி, உரிய பயிற்சியாளர் இன்றி, அவர்கள் விளையாட அனுமதிக்கப் படுவதில்லை.

ஜமாத்களின் கட்டுப்பாட்டில் வருகிற பொது மைதானங்களும், அந்தந்த தெரு ஜமாத் ஆளுமையின் கீழ் வரும் பள்ளிகளை மையமாக வைத்தோ, அல்லது தனியார் விளையாட்டு பயிற்சிக்கழகத்தை மையமாக வைத்தோ செயல்படுகிறன. உதாரணமாக: வடக்குத் தெரு மணல் மேடு மற்றும் தெற்குத்தெரு மினி கிஷ்கிந்தா.

இது குறித்து, நமதூர்  பிரபல வாலிபால் வீரர் சாகுல் ஹமீத் கூறுகையில், நகரின் பெரிய மற்றும் பிரதான விளையாட்டு மைதானமானமான ஹமீதியா விளையாட்டு மைதானம், பொது மக்கள் உடற் பயிற்சிக்காகவும், நடை பயிற்சிக்காகவும், விளையாட்டு பயிற்சிக்காகவும், பொழுது போக்கு விளையாட்டிற்காகவும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது,

நமதூரைச் சேர்ந்த பல நண்பர்கள், வட்டார / மாவட்ட / மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்புற்று திகழ்ந்தனர். நானெல்லாம் மைதானத்திற்கு வர அவர்கள் தான் “இன்ஸ்பிரேஷன்”. ஆனால் தற்சமயம் சில பல காரணங்களால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. என்று ஆதங்கப்பட்டார்.

விளையாட போதிய இடமின்மை, பதின்பருவ மாணவர்கள் தவறான நடவடிக்கைகளில் செல்ல, எத்தனிக்க காரணமாகி விடும். அதை தவிர்க்க போதிய பாதுகாப்புடன் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதியளித்து நமதூர் இளந்தூண்கள், தேசிய, உலக அளவில் பிராகாசிக்க நம் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பதிலளிக்கையில், ”இவர் பாட்டுக்கு ஒரு பக்கம் விளையாட,  திறந்த “கேட்” ல் ஆடு / மாடு / கழுதை / நாய் என்று எல்லாம் வந்து “கக்கா” போயிடுது. விளையாட போயிட்டு சும்மாவா வர்ராங்க, சில நபர்கள் சுவற்றோரம் சிறுநீர் கழித்து விடுகின்றனர், விளையாட்டு மைதான மேடையையும் மேற் கூறையையும் சேதப்படுத்துகின்றனர், சிகரெட் பீடி துண்டுக்களை இறைகின்றனர். அடுத்த நாள் அங்கு விளையாட வரும் பள்ளி மழலைகள், இதே இடத்தில் விளையாடுவர், அமர்வர் என்று அவர்கள் துளியும் நினைப்பதில்லை” என்று யதார்த்தத்தை பதிவு செய்தார்.

இந்த உரையாடலை பிரசுரிப்பதின் நோக்கம் இதுதான்:

விளையாட்டு ஆர்வம் உடைய, மாணவர்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து, விடுமுறை நாட்களில் உரிய உபகரணங்கள் கொண்டு முறையாக விளையாடவும், எந்த அசாதாரண காரியங்களிலும் ஈடுபடுவதில்லை என்றும் உறுதியளித்து வேண்டுகோள் வைத்தால், எந்த மைதான அனுமதியும்  உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

கூடுதலாக, பெயர், முகவரி, பள்ளி / கல்லூரி ஆகியன கொண்ட பதிவின் (“registration”) அடிப்படையில், ”பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்” என்பன போன்ற விதிகளை முன் மொழிந்து அனுமதி பெற்றால், விஷமிகளில் பொருள் சேதத்திலிருந்தும் பள்ளியின் / மைதானத்தின் கட்டுமானம் / உடமைகள் பாதுகாக்கப்படும்.

தகவல் மற்றும் பொதுநலம் கருதி வெளியிடுவோர் : கீழக்கரை.காம்

FACE BOOK COMMENTS : 
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்த கணினியுக காலத்தில், நம் பிள்ளைகள் விளையாடோ போறேன் என்று வீட்டில் சொல்லி விட்டு, நேராக ப்ளே ஸ்டேசன் கேம்களில் கால்பந்தும், கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மைதான விளையாட்டுகள் என்பது அறவே மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்த வேளையில் நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வையும் கருத்தில் கொண்டு, விளையாட்டு மைதானங்களை பூட்டி வைத்து பாதுகாக்காமல், அவர்கள் சுததிரமாக விளையாடி மகிழ்வதற்கும், சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும் தினமும் திறந்து வைக்க வேண்டும்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா22 September 2013 at 19:08

    கருத்தாழம் மிக்க காலத்திற்கேற்ற கருத்துரு.இதில் குறிப்பிட்டப்படி பல சிரமங்கள் இருந்தாலும் இதன் உயரிய நோக்கினை மனதில் கொண்டு,அனைத்து பள்ளி தாளாளர்கள் உட்காரந்து பேசி தீரவு கண்டு செயல் படுத்த பிரார்த்தனையுடன் வழி மொழிகிறேன்.

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    ReplyDelete