தேடல் தொடங்கியதே..

Wednesday 25 September 2013

கீழக்கரையில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாக 'புனித ஹஜ்' யாத்திரைக்கு புறப்படும் ஹஜ் பயணிகள் !

உலகமெங்கும் இருந்து ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. மேலும் தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக ஒவ்வொரு ஆண்டும் மெக்காவிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3729 பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து வெளி விவகாரங்களையும் தமிழக ஹஜ் கமிட்டி செய்து முடித்துள்ளது. 


கீழக்கரையில் இருந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாகவும், பல்வேறு தனியார் ஹஜ் சர்வீஸ்கள்  மூலமாகவும் 50 க்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக இன்று (25.09.2013) கீழக்கரையிலிருந்து பலர், இராமநாதபுரத்தில் இருந்து இரயில் மூலம் சென்னை புறப்படுகிறார்கள். அங்கிருந்து  29-09-2013 அன்று விமானம் மூலம் ஜித்தா செல்ல இருக்கிறார்கள். 

இவர்களுள் சின்னக்கடை தெருவில் இருந்து 2 பேர், அம்பலார் தெருவில் இருந்து 2 பேர், தெருவில் இருந்து 3 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இறை கடமையை இனிதே நிறைவேற்ற அடியெடுத்து வைக்கும் இவர்களை வழியனுப்ப, ஜமாத்தார்கள் தெருவாசிகள், உறவினர்கள், நண்பர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அன்பை வெளிப்படுத்தும் முகமாக ஸலாத்துடன், மார்போடு ஆரத் தழுவி, தங்களுக்கும் ஹஜ்ஜில் துஆ செய்யுமாறு வேண்டி கொண்டனர். 



இது குறித்து கீழக்கரையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் S.N.தெருவைச் சேர்ந்த S.N.சுல்தான் அவர்கள் (தாஜ் மலர் நிலையம்) கூறும் போது "இறைவன் அருளால், இறைக் கடமையை நிறைவேற்ற புனித ஹஜ் பயணத்தை என் மனைவி மற்றும் சகோதரியுடன், இன்று இறைவனின் திருப் பெயரால் துவங்குகிறேன். எங்களுடைய இந்த ஹஜ் கடமை சிறப்பாக நிறைவேற அனைவரும் இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று கண்ணிய வார்த்தைகளுடன் ஆனந்தமாய் தெரிவித்தார்கள்.


புனித ஹஜ் பயணத்தின் முதல் குழு நேற்று (24.09.2013) காலை 9 மணிக்கு, சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 131 பெண்கள் உள்பட 275 பேர் சென்றனர். அடுத்த மாதம் (அக்டோபர்) 2–ந்தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment