தேடல் தொடங்கியதே..

Monday 12 August 2013

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், நாளை நடை பெறும் 'தொழில் முனைவோர் விழிப்புணர்வு' கருத்தரங்கு - படித்த இளைஞர்கள் 'ரூ. 1 கோடி' வரை கடனுதவி பெற வழிகாட்டும் நிகழ்ச்சி !

கீழக்கரையில், இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் நடத்தும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், முஹம்மது சதக்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாளை (13.08.2013) செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் நடை பெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான வழி காட்டுதல்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அறிவிப்பு படி, ரூ.1 கோடி வரை... 25 சதவீத மானியத்தில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சந்தை வாய்ப்பு உள்ள உற்பத்தி தொழில் மற்றும் சேவைத்தொழில்களை தொடங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் மூலமாக, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கி, புதிய உற்பத்தி, சேவைத் தொழில்களை தொடங்க ஊக்கப்படுத்தப்படுகிறது. மேலும்  இளைஞர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் YEGP கீழ் இளைஞர்கள் மற்றும் மகளீர் குறுந்தொழில்கள் செய்திட 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை 30 சதவீத மானியத்தில் கடனுதவி அளிக்கப்படுகிறது.

இது தவிர பாரதப் பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் PMEGP கீழ் I.T.I, DIPLOMA, DEGREE போன்ற படித்த இளைஞர்கள் தொழில் துவங்கிட 30 சதவீத மானியத்தில் ரூ. 25 இலட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.

                                             கடனுதவி பெறுவதற்கான தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியான பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐடிஐ அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழிற்சார் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருமான வரம்பு எதுவும் கிடையாது. உரிமையாளர் நிறுவனங்களும், பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெற தகுதியுடையவர்கள். இத்திட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்க 3 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.



இந்த ஒதுக்கீடுகளில் தேவையான நபர்கள் இல்லாத பட்சத்தில், இதர பிரிவினரில் இருந்து தகுதிகளுடன் கூடிய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படுகிறது. திட்ட பயனாளிகள் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பயிற்சி பெற்றவர்கள் வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு தொழில் தொடங்க தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற ஆவண செய்யப்படுகிறது.

இந்த அருமையான நிகழ்ச்சியில், நம் கீழக்கரை பகுதியை சார்ந்த படித்த இளைஞர்கள், உள்ளூரில் தொழில் துவங்க ஆர்வமுடைய முனைப்பாளர்கள், கலந்து கொண்டு பயன் பெறுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் : ரோட்டரியன். இஞ்சினியர் ஆசாத் ஹமீத் 

No comments:

Post a Comment