தேடல் தொடங்கியதே..

Wednesday 14 August 2013

கீழக்கரையில் குழந்தைகளை குறி வைக்கும் மர்ம கும்பல் - குழந்தைகள் பத்திரம் ; பெற்றோர்கள் உஷார்..! (விழிப்புணர்வு கட்டுரை)

தினமும் செய்தித் தாள்களில் "குழந்தைகளை கடத்திய 10 பேர் கைது - 3 குழந்தைகள் மீட்பு, பணத்திற்காக சிறுவன் கடத்தல், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நான்கு பெண்கள் சிக்கினர் : பணத்திற்கு விற்க இருந்த இரண்டு குழந்தைகள், காயல்பட்டினத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்தி சென்ற நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்" என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 


இந்நிலையில் கீழக்கரை  கட்சி மரைக்காயர் தெருவைச் சேர்ந்த, துபாயில் பணி புரியும் அப்பாஸ் கான் அவர்களின் மகன் அப்துல் ஹாதி (வயது 10) என்கிற சிறுவனை, நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத மர்மக் கும்பல், ஆம்னி வேனில் கடத்தி சென்று விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிறுவனின் உறவினர் 'கல்யாணம் தம்பி' என்கிற அப்துல் ரசீக் அவர்கள் நம்மிடையே பேசும் போது "எனது சகோதரி மகன் அப்துல் ஹாதி இஸ்லாமியா  பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். 

அவனை நேற்று முன் தினம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை ஹமீதியா கட்டிடம் அருகில் வந்த போது வேனில் வந்த ஒரு மர்ம கும்பல் சிறுவனை வேனுக்குள் இழுத்து கண்ணையும், வாயையும் பொத்தியபடி கடத்தி சென்றுள்ளனர்.

சிறிது நேரம் கீழக்கரை நகருக்குள் சுற்றிய அந்த ஆம்னி வேன், தெற்குத் தெரு பகுதியில் வந்தவுடன் ஓடும் வேனிலிருந்து சிறுவனை கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். இந்த கடத்தல் சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது குறித்து கீழக்கரை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களும் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். இறைவன் அருளால், என் மருமகன் வீடு திரும்பி விட்டான். இது போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க விடாமால் பெற்றோர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.

சிறுவர்களை எதற்காக கடத்துகிறார்கள்..?

குழந்தைகள் கடத்தல் என்பது விநோதமான விளையாட்டுத் தனமாய் உயிர்களை பலி வாங்கும் நடவடிக்கையாக உருவெடுத்து வருகிறது. பல நேரங்களில் பணம் பறிப்பதற்காய் நண்பர்களுடன் செய்த பல கடத்தல் நாடகங்கள்  கூட கொலையாகியிருக்கிறது. தற்போது வெளியாகும் சில தரம் கேட்ட சினிமாக்களும் குழந்தைகளை கடத்துவது எப்படி என சமூக விரோதிகளுக்கு பாடம் நடத்துகிறது.

இவை தவிர பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விற்பனை செய்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல், வீட்டு வேலைகளுக்காகக் கடத்துதல், தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தைகளைக் கூட்டிச் சென்றுத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் வலுவானதாக இல்லை. அவை குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கான பல்வேறு ஓட்டைகளை வைத்திருக்கின்றன. தொடர்பு சாதனங்களும், பத்திரிகைகளும் உலகத்தை நம் முன் சுலபமாகக் கொண்டு வந்த காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படுவது சாதாரணச் செய்திகளாக நமக்கு வந்து சேர்கின்றன.


குழந்தைகள் பத்திரம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் கடத்தலை தடுக்கும் முகமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாட வேண்டும்.

"சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித் தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும்.

கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள், தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும்.

சிறுவர், சிறுமியருக்கு.. கராத்தே, குங்க்பூ போன்ற தற்காப்புக் கலை பயற்சிகளை கற்க ஆர்வமூட்ட வேண்டும். முடிந்தால் பள்ளிகளில் முறையான ஆசிரியரை கொண்டு சொல்லித் தர முயல வேண்டும்.

பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு நடை பெரும் பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும்.

மேலும் குழந்தை தடுத்தலை தடுப்பது குறித்து, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீஸார்  இணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

குழந்தை கடத்தலை தடுக்க அனைவரது ஒத்துழைப்பும், அவசியம், ஒவ்வொரு மாணவர் மீது ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிகளில் முறையாக கடிதம் கொடுக்காத குறிப்பிட்ட நேரத்துக்கு பின் வீட்டுக்கு வராத மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் தகவல் தெரிவிப்பது அவசியம்.

தனியார் பள்ளி வேன், பஸ் டிரைவர்கள் விபரங்களை முழுமையாக தெரிந்து கொண்ட பின் வேலை வழங்க வேண்டும். ஆட்டோ, ஆம்னி வேன்களில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், பள்ளி நேரம் முடிந்ததும், பிள்ளைகளை வீடுகளுக்கு ஏற்றி செல்ல சம்பந்தப்பட்ட ஆம்னி அல்லது ஆட்டோ வரும் வரை பள்ளியின் வளாகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத வாகனங்களில் செல்லக் கூடாது.

முன் பின் அறிமுகமில்லாத நபர்களுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூடாது.

பள்ளி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் கண்காணித்தல், தொடர்பு இல்லாமல் மாணவர்களிடம் பேசினால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

கீழக்கரையில் நடந்த இந்த சம்பவத்தை எங்கோ, யாருக்கோ நடந்து விட்டதாக கருத்தில் கொள்ள முடியாது. இது போன்று நாளை நம் வீட்டுக் குழந்தைகளுக்கோ, சிறுவர், சிறுமியருக்கோ நடை பெற்று விடலாம். ஆகவே தகுந்த முன்னெச்சரிக்கையுடன் நாம் சிந்தித்து செயல் பட வேண்டும். 

பெற்றோர்களே... விழிப்புணர்வு பெறுவோம்.. நம் குழந்தைகளை காப்போம்...   

No comments:

Post a Comment