தேடல் தொடங்கியதே..

Saturday, 17 August 2013

கீழக்கரையில் நாளை நடை பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் - பரபரப்பாகும் '18 ஆம்' தேதி !

கீழக்கரை நகரில் நாளை (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை காலை முதல் நள்ளிரவு வரைக்கும், நடுத் தெரு, மேலத் தெரு, கிழக்குத் தெரு, கோக்கா அஹமது தெரு, வடக்குத் தெரு, பழைய குத்பா பள்ளி தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, சின்னக்கடைத் தெரு, தெற்குத் தெரு, சாலை தெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தெருக்களில் இரு மனம் இணையும் 'திருமண வைபவங்கள்' நடக்க இருக்கிறது. 

இதற்காக வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான நண்பர்கள் தற்காலிக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். பெரும்பாலான திருமணங்கள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடை பெறுகிறது. இதனால் கீழக்கரை நகரமே, மிகவும் பரபரப்பாக விழாக் கோலம் பூண்டுள்ளது. கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் பள்ளிவாசல்களிலும், பள்ளிக் கூடங்களிலும், திருமண வளாகங்களிலும், திருமண மண்டபங்களிலும், கல்யாணங்கள் நடை பெற இருப்பதால், அனைத்து திருமணங்களிலும் கலந்து கொள்ள முடியுமா..? எந்த திருமண நிகழ்ச்சிக்கு முதலில் செல்வது..? யார் தரும் திருமண விருந்தில் பங்கேற்பது..? என்று நண்பர்களும், உறவினர்களும் லேசான கலக்கம் அடைந்துள்ளனர். 

சரியான நேரத்தில் திருமண நிக்காஹ் செய்து வைக்கும் நோக்கோடு பள்ளிகளில் ஆலீம் பெருமக்கள் திருமண நிக்காஹ் பதிவேட்டினை முறைப்படி , வரிசைக்கிரமமாக பட்டியலிட்டு வைத்துள்ளனர்.

கீழக்கரையில் நாளை நடக்க இருக்கும் திருமண வைபவங்கள் தவிர கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக தமிழக அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி, பொது நல அமைப்புகள் மற்றும் சங்கங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்கள் என அடுக்கடுக்காக நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை ஓய்வின்றி வலம் வருகிறது. 

இதனால் இறைவன் நாடினால், நாளைய சூரிய உதயம், கீழக்கரை வாசிகளுக்கு பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், மன மகிழ்வுடனும், சந்தோசமுடனும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

No comments:

Post a Comment