தேடல் தொடங்கியதே..

Sunday 3 November 2013

கீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கால் அவதியுறும் சாலை தெரு பொது மக்கள் - தோண்டி போட்ட கற்களால் தொடரும் ஆபத்து !

கீழக்கரை சாலை தெரு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கழிவு நீர்குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் வேலைகளை 'அதிரடியாக' செய்தது. அப்போது ஜேசிபி இயந்திரத்தால் அவசர கோலத்தில் தோண்டப்பட்டதால், வீடுகளில் இருந்து செல்லும் கழிவு நீர் குழாய்கள் சரமாரியாக உடைக்கப்பட்டதுடன், அங்கு தோண்டி வைக்கப்பட்ட கற்களாலும், குவித்து வைக்கப்பட்ட மண் குவியலாலும் பொதுமக்கள் நடந்து செல்ல கூட வழியின்றி தடுமாறினர். 



குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக மாறிப் போன சாலை தெரு பகுதியில் தற்போது வேலைகள் முடிவடைந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், நகராட்சியால் இந்த பகுதியில் தோண்டி வைக்கப்பட்டுள்ள கற்களும், மண்ணும் அள்ளப்படாமல் கை விடப்பட்டுள்ளது. 



தற்போது கீழக்கரை நகரில் மழை பெய்து வருவதால், இந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் எந்த பகுதியில் குழி இருக்கிறது ? எங்கு பள்ளம் இருக்கிறது ? என்று தெரியாமல் நடந்து செல்லும் பொதுமக்கள், தடுமாறி விழுந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று காலை, தண்ணீர் ஏற்றி சென்ற குட்டி யானை பள்ளத்தில் சிக்கி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாக இருந்தது. இறைவன் அருளால் நல்ல வேலையாக அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சாலை தெரு நண்பர்கள், வண்டியை பள்ளத்தில் இருந்து மீட்டு உதவினர். 


இது குறித்து சாலை தெருவை சேர்ந்த சீனி ஆலீம் அவர்கள் கூறும் போது "குழாய் பதிக்கிறோம் என்கிற பெயரில் சாலை தெருவை அலங்கோலப்படுத்தி விட்டு போய் விட்டனர். இதனால் பள்ளி சிறுவர்கள் முதல் பெண்மணிகள், முதியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வருகிறார்கள். கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர், இங்கு தோண்டி வைத்திருக்கும் கற்களை அப்புறப்படுத்துவதொடு, உடனடியாக சாலை தெரு பழைய டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதியில் இருந்து சிமெண்ட் ரோடு வரை புதிய சாலை அமைத்து தர வேண்டும்." என்று தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

No comments:

Post a Comment