தேடல் தொடங்கியதே..

Saturday 28 September 2013

கீழக்கரையின் 'மலரும் நினைவுகள்' - தங்கராசு நாகேந்திரன் அவர்களின் பழமையை நினைவூட்டும் பதிவு !

கீழக்கரையில் கடந்த 1970  ஆம் ஆண்டு கால கட்டங்களில் தனித்துவமாக (MONOPOLY) இருந்த வியாபார தளங்களை, கீழக்கரையை சேர்ந்த சகோதரர் தங்கராசு நாகேந்திரன் அவர்கள் பழமையை நினைவூட்டும் விதமாக பட்டியலிட்டு பதிவு செய்து இருக்கிறார். இவர் கீழக்கரையின் பழைமை நினைவுகளை தொடர்ந்து பதிந்து வருகிறார்.



கருப்பையா முடி திருத்தகம் :

கருப்பையா கடை நம்ம இம்பாலா ஹோட்டலுக்கு எதிரே இருந்த்தது. கீழக்கரையிலேயே அந்தக் காலத்தில் நவீனமான சலூன் அது தான். எப்பவும் கூட்டமாகத் தான் இருக்கும். இப்ப அந்த இடத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கு. 

தைக்கா ஹோட்டல் :

இதற்கு இரண்டு வாசல் ஒரு வாசல் ஸ்டேட் பேங்க் பின்புறமும் மறுவாசல் தங்கம் லேத் பின்புறமும் இருக்கும் தரையில் உட்கார்ந்துதான் சாப்பிடனும். அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் என நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. ருசியும் நன்றாக இருக்கும். இந்த இடத்தில் ஹோட்டல் காலாவதியானதும் ஒரு மொசைக் கம்பெனி இருந்தது. இப்ப அதுவும் இல்லை.

சொர்ணம் புக் செண்டர் :

சீதக்காதி சாலையில் மூத்திர சந்து போற பாதையில் மெயின் ரோட்டில் இந்த கடை இருந்தது. சதக்கத்துன் ஜாரியாவில வேலை பார்த்த திருமனி டீச்சரின் தம்பி கடை இது. கரீம் ஸ்டோர் வருவதற்கு முன்னால் ஸ்டேசனரி கடையில் நல்ல கடை இதுதான் பேனாவில் கேம்லின் பேனாவில் மட்டும் பலவகை இருக்கும் எனக்குத் தெரிந்து கேம்லின் 47 பேனா இங்கு மட்டும்தான் கிடைக்கும்.

ஹேமந்த் டெய்லர் :

இதுவும் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமலஹாசன் வருவது போல் ஹேமந்த் டெய்லர் பெரிய பெல்பாட்டம் பேண்ட் போட்டு இருப்பார். அந்த பேண்டில் பாட்டத்தில் ஜிப் எல்லாம் வைத்து ஒரு செட்டப்பாக இருக்கும். அந்த கால இளைஞர்களின் பேஷன் கடை அதுதான்.

அய்யர் ஹோட்டல் :

இதுவும் மெயின் ரோட்டில்தான் இருந்தது. சைவசாப்பாட்டில் தனித்துவமாக இருக்கும் சாம்பார் நன்றாக இருக்கும்.

கானா சீனா இரும்புக்கடை :

எனக்கு தெரிந்து கீழக்கரையின் முதல் ஹார்டுவேர்ஸ் கடை இதுதான் என நினைக்கிறேன் லெப்பை ஹோட்டல் எதிரில் இருந்தது. ஒரு புள்ளி மான் எப்பவும் கடையில் நிற்கும்.

சன் ஐஸ் கம்பெனி : 

வைக்கப் பேட்டை ரைஸ் மில்லுக்கு எதிரில் இருந்தது. சப்பை ஐஸ் குண்டு ஐஸ் சேமியா ஐஸ் என பல வெரைட்டி இருக்கும் கம்பெனியிலேயே போய் ஐஸ் வாங்கினால் ஐந்து பைசாவுக்கு இரண்டு கொடுப்பார்கள் எனது சின்ன வயதில் நான் அடிக்கடி செல்லும் இடம் இதுதான்.

விஜேந்த் போட்டோ ஸ்டுடியோ :

இப்ப கீழக்கரையில் ஸ்டுடியோ வைத்திருக்கும் எல்லோரும் தொழில் கற்று கொண்ட இடம் இதுவாக தான் இருக்கும் ராஜகோபால் டாக்டர் வீட்டின் எதிரில் இருந்தது. ஓனர் சற்று பெண்மைக் குரலில் பேசுவார். சின்ன வயதிலேயே மாரடைப்பால் காலமானார்.

குமரன் பிரேம் கடை :

லெப்பை ஹோட்டலுக்கு அருகில் அண்ணா படக்கடை என ஒருவர் வைத்திருந்தார். இருப்பினும் குமரன் பிரேம் கடை விஜேந்த் ஸ்டுடியோவிற்கு அருகிலேயே இருந்ததால் படம் எடுக்கவும் பிரேம் செய்யவும் வசதியாக இருந்தது. 

கனி பால் டிப்போ :

கீழக்கரையில் பிரமாண்டமான பால் பண்ணை இதுதான் எவ்வளவு எருமை மாடுகள் அதிலும் காளை எருமை மாடுகள் பார்க்கவே பயமாக இருக்கும் இப்ப இந்த பால் பண்ணை இருந்த இடத்தில் வணிக வளாகம் உள்ளது.

அப்சரா தியேட்டர் :

வாழ்க்கையில் படிக்கிற காலத்துல பாதி நாள் இங்கதான் போனது. நீயா படத்துக்கு கூட்டம் மாட்டிறைச்சி கடை வரை இருந்த்தது. ஹமிதீயா ஸ்கூலில் படிக்கும் போது பிஸிக்ஸ் மாஸ்டர் முஸ்தபா கமால் மதியம் பிராக்டில் கிளாஸ் கிடையாது தியரி கிளாஸ் தான்னு சொன்னால் சொல்லிவச்ச மாதிரி எல்லா பயலுகளும் அப்சராவில் ஐக்கியமாயிடுவோம்.

மாங்காய் கடைகள் :

சதக்கத்துன் ஜாரியாவில் படிக்கும்போது அதன் அருகில் கே கே ஆர் பேக்கரி அருகில் பாரின் ஹுட்ஸ் கடைகளில் மாங்காயை குழம்போடு ஒரு கிண்னத்தில் ஊற்றி கொடுப்பார்கள் நல்ல சுவையாக இருக்கும் இப்ப அந்த மாதிரி கிடைப்பது இல்லை.

இந்தமாதிரி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செக்கடியில் கீச்சு பூச்சு செட்டியார் கடை, கடலைக்கடையும் சர்பத்து கடையும் வச்சிருந்த காக்கா கடை பண்டகசாலை தெருவில் சீப்பு பணியாரமும் ரோஸ் மில்க்கும் வியாபாரம் செய்யும் சேனா கடை, சந்திரன் பால் டிப்போ அதற்கு பக்கத்திலேயே ஒரு விளம்பர போர்டுகள் எழுதும் ஒரு ஓவியர், சிக்கர் லைட்டு கல் பம்பரம் கோலிகுண்டு வியாபாரம் செய்யும் அலவாக்கரைவாடி ராமர் கடை, பாட்டு புத்தகம் விற்கும் தவ்பீக் கடை இப்படி மறக்க முடியாத சிறுவயது ஞாபகங்களை தூண்டும் நிறையக் கடைகள்... என் கீழக்கரையில் உண்டு.


ஆக்கம் : தங்கராசு நாகேந்திரன்

நண்பர்களே... இங்கு இன்னும் எத்தனையோ தனித்துவமிக்க வியாபார தளங்கள் விடுபட்டு இருக்கலாம். நெஞ்சில் நீங்காத அந்த ஞாபகங்களை, கீழக்கரையின் இளைய தலை முறையினரும் அறியும் வண்ணம் உங்கள் கருத்துகளை இங்கு பதிவிடுங்களேன்..

8 comments:

  1. கீழக்கரை அலி பாடசா28 September 2013 at 23:02

    சங்கு, கடல் சிப்பிகளால் ஆன மாலை மற்றும் அலங்காரப் பொருட்களின் விற்பனை நிலையமான ஐந்து வாசல் கிட்டங்கி (இப்போது ஸ்டேட் பேங்க் முன் உள்ளது),

    சின்னக்கடை தெருவில் பல சரக்கு சாமான்களை விற்பனை செய்த சரவணன் நாடார் கடை,

    செக்கடியில் கொக்கரகோ மற்றும் அங்குச்சாமி நாடார் பலசரக்கு கடைகள்,

    தச்சர் தெருவில் பஞ்சாட்சரம் பல சரக்கு கடை,

    சீனிவாசன் நாடார் ஈக்கி கடை (செக்கடி),

    முனியாண்டி(செம்மான்) செருப்பு தைக்கும் கடை (முஸ்லீம் பஜார்),

    நாகரெத்தினம் பிள்ளை தொப்பிகள் தயாரிக்கும் கடை (அஞ்சலக வீதி),

    டாஸ் பிரஸ்,

    பழைய மீன் கடையில் மம்மால்து காதர் மாமா (முகம்மது வாப்பா} டீக்கடை.

    நடமாடும் அத்தர் வியாபாரி ஹைதர் அலி காக்கா,

    மீ.ம.நெ.மு. ஜவுளிக் கடை (முஸ்லீம் பஜார்)

    கே.டி.எம். மரக்கடை (மேலத் தெரு),

    வாணியச் செட்டி (வள்ளல் சீதக்காதி சாலை) மற்றும் முத்தலிபு அப்பா நல்லெண்ணெய் கடைகள்....

    ஒரு முடக்கு தண்ணீர் குடித்து விட்டு தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாடசா28 September 2013 at 23:34

    அன்று...... வள்ளல் சீதக்காதி சாலையிலிருந்து (கிழக்கன் ரைஸ் மில்லில்லிருந்து) பணியக்காரத் தெரு வழியாக ஐந்து வாசல் கிட்டங்கிக்கு ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பது, அறுபதுகளில் பயணிக்காத தமிழக ஆளூநர்களோ, காங்கிரஸ் முதல் மந்திரிகளோ, அமைச்சர்களோ கிடையாது. அப்படிபட்ட ராஜா வீதியின் இன்றைய நிலையை காணீரோ?

    ReplyDelete
    Replies
    1. முன்பு இருந்த பெரியோர்கள் தங்களின் சந்ததிகளை நல் வழில் விட்டு சென்றார்கள் , இப்போது உள்ள பெரியோர்கள் தங்களின் சந்ததிகளை வழி கேட்டின் உச்சில் விட்டு செல்கிறார்கள் , இதுதான் உண்மையான மாற்றம்,

      Delete
  3. http://selvanuran.blogspot.in/2009/08/blog-post_03.html

    ReplyDelete
  4. இவைகள் மட்டும் மாறவில்லை , கீழகரைல் 1970 இல் இருந்த நல்ல பண்பாடும் , கலாசாரமும் , கெட்டு சிரழிந்து கொண்டு வருகிறது!!!

    ReplyDelete
  5. thank you very much thambi keelai ilaivavan i never expect that you promote my article in your blog i would be ever grateful to you

    ReplyDelete
  6. thank you very much thambi keelai i never expect you promote my article in your blog thank you very much

    ReplyDelete
  7. நண்பர்களே இது மட்டுமா இன்னும் இருக்கிறது. இதோ உங்களின் ஞாபகத்திற்க்கு நாம் சிறு வயதில் பம்பரம் விட்டு விளையாடுவோமே அந்த பம்பரத்திற்கு புதிதாக ஆணிஅடிக்க கீழக்கரையில் இருந்த ஒரே கடை அரமா கடைஞாபகத்திற்கு வரவில்லையா இந்த கடையில் பழைய பூட்டுக்கு
    சாவி தயாரித்துத்தருவார் பால் டப்பாவில் உண்டியலும் தயாரிப்பது கடைஞாபகத்திற்கு வரவில்லையா இந்தக்கடை இப்போது இரவு சாப்பாட்டுக் கடை வைதிருக்கிறார்கள் மூக்குத்தி அம்மா என்றழைக்கப்படும் லேடி டாக்டர் மருத்துவம் இடம் இப்போது மூர்டிராவல்ஸ்க்கு எதிரில் இருந்தது நண்பர் அப்ரசா தியேட்டரை குறிப்பிட்டார் அதேஇடத்தில் இதற்க்கு முன் அஸ்கர் தியேட்டரும் அதற்க்கு முன் லக்கிடாக்கீஸ் இருந்ததே கொஞ்சம் ஞாகப்படுத்திப் பார்க்கவும்
    ஹபீப் முகம்மது
    நினைத்ததை முடித்தான் பட்டணம்

    ReplyDelete