தேடல் தொடங்கியதே..

Sunday 4 August 2013

கீழக்கரையில் நோன்புக் கஞ்சி வாங்க, பள்ளிப் பருவ நாள்களில் நண்பர்களோடு நகன்ற நாட்கள் - மலரும் நினைவுகள் !

கீழக்கரை நகரில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவருக்கும், நெஞ்சை விட்டு நீங்காதஇந்த இனிய அனுபவம் நிச்சயமாக இருக்கும். ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி வாங்க, வீடுகளில் இருந்து தூக்கு வாளிகளை எடுத்துக் கொண்டு, நண்பர்கள் பட்டாளத்துடன், பள்ளிவாசல்கள் நோக்கி விரைந்த நாட்களை கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், மனம் சிறு வயது காலம் நோக்கி சிறகடிக்கிறது.



காலையில் பள்ளிக் கூடத்திற்கு வரும் போதே, சக வகுப்பு தோழர்கள் அனைவர்கள் கையிலும், நோட்டு, புத்தகங்களுடன், மாலையில் வாங்க இருக்கும் நோன்புக் கஞ்சிக்காக தூக்குச் சட்டியும் நிச்சயம் இருக்கும்.  முன்பெல்லாம் நோன்பு காலங்களிலும் பள்ளிக் கூடங்கள் மாலை 4.30 மணி வரை வேலை நேரமாக இருந்தன. 

அதனால் பள்ளி கடைசி பீரியடை கட் அடிப்பது என்பது மாணவர்கள் மத்தியில் மாபெரும் சாதனையாகவே கருதப்பட்டது. பின்னர் பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினரால், ரமலான் மாதத்தில் பள்ளி வேலை நேரம், 4 மாலை மணியாக குறைக்கப்பட்டது. 

நோன்பு பிடித்திருக்கும் களைப்பையும் தாண்டி, பள்ளியில் கடைசி வகுப்பு முடிந்து மணி அடித்ததும், நண்பர்களோடு சிட்டாய் பறந்து சென்று, நோன்பு கஞ்சி வாங்க இடம் பிடிக்கும் சுறு சுறுப்புக்கு அளவேயில்லை

அஷர் தொழுகை முடித்து தான் கஞ்சி ஊற்ற துவங்குவார்கள் என்பதால், தூக்குச் சட்டிகளை வரிசையாக வைத்து இடம் போட்டு விட்டு, அன்றைக்கு நோன்பு பிடிக்காத நண்பன் ஒருவனை, வரிசையில் எவரும் புகுந்து விடாமலிருக்க, காவலுக்கு வைத்து தொழ சென்றது  இன்றும் காட்சிப் படமாக நகர்கிறது.

பல நேரம் காவலுக்கு ஆள் வைத்தும் கூட, சில அதிமேதாவி மூத்தவர்கள் இடையில் புகுந்து அமர்க்களம் செய்வார்கள். சில நேரம் தள்ளு முள்ளும் நடந்தேறும். "எல்லாருக்கும் கஞ்சி இருக்கு சத்தம் போடாதியப்பா" என்று முன்னாலிருந்து ஒரு குரல் வரும்.

சிறிது நேரம் கழித்து "மச்சான்... அரை மணி நேரமாச்சி வரிசை நகரவே மாட்டேங்குது.. என்னன்னு போய் பாருடா" என்று நண்பன் ஒருவனை தூது விட்டு பார்த்ததில்,

"மச்சான் நம்ம நிக்கிறது வரிசையே இல்லையாம்டா" என்று ஏகத்துக்கு குண்டை தூக்கி போடுவான்.

"சரி விடு மச்சான்... கடைசிலே வாங்குனா தாண்டா கறிக் கஞ்சாக் கெடைக்கும்என்று மனசை தேர்த்திக் கொண்டு மறு படியும் சரியான வரிசையில் நின்று,

ஒரு வழியாக நோன்புக் கஞ்சி வாங்கி, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே வீடு போய் சேர, நோன்பு திறக்குற நேரமே வந்து விடும் 

இப்படியாக சிறு வயதில், பள்ளியில் பயின்ற அழகிய காலங்களில், நண்பர்களோடு கை கோர்த்து, ரமலான் நோன்பு முழுவதும், தினமும் நோன்புக் கஞ்சி வாங்கி வந்த, மறக்க முடியாத தருணங்கள் உங்களுக்கும் இருக்கும் தானே... 

FACE BOOK COMMENTS : 

Like · · Unfollow Post · Share · Edit

No comments:

Post a Comment