தேடல் தொடங்கியதே..

Monday 21 October 2013

கீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந்த பழம் பெரும் வீடுகள் - பகுதி 2

கீழக்கரையில் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் 'பீனா செனா' P.S.மாமா அவர்களின் இந்த இல்லம் வரலாற்றை பின்நோக்கி பார்க்கிறவர்களுக்கு பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் காணப்படும் தூண்கள் அனைத்தும் மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும் வகையில் மேல் தளத்தில் ஆங்காங்கே கண்ணாடி பாதிக்கப்பட்டு, சூரிய ஒளி வீட்டுக்குள் பிரகாசிக்கிறது. 


அந்த காலத்திலேயே அற்புதமாக கட்டுமானம் செய்யப்பட்டு இருக்கும் இந்த வீட்டுக்குள் நுழைந்ததும், அலங்கார வளைவுகள், நீண்ட விசாலமான முற்றம், நுணுக்கமான வேலைப்பாடமைந்த பர்மா தேக்குக் கதவுகள் என அழகாக காட்சியளிக்கிறது. இது போன்று நூற்றாண்டுகளாய் நிலைத்திருக்கும் இந்த வீடுகள் கட்டி இத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுவர்கள் இன்னும் வழவழப்பாகவும், உறுதியாகவும் இருப்பதற்குக் காரணம் சுண்ணாம்புச் சாந்துடன் முட்டை, கருப்பட்டி, கடுக்காய் ஆகியவற்றின் கலைவையும் பயன்படுத்தியது தான்.


19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே, பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை கீழக்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அப்போது, ரங்கூனுக்கும், தமிழகத்தின் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தொண்டி, கீழக்கரை, மீமிசல் உள்ளிடட பல துறைமுகங்களுக்கும் கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் தெளிவுபடுத்துகிறது. 


அளவில் பெரிய தேக்குமரத் தடிகளை, சிறு கப்பல்களில் ஏற்ற முடியாது. எனவே, வெட்டப்பட்ட தேக்கு மரத் தடிகளைச் சங்கிலிகளால் பிணைத்து, கப்பலோடு சேர்த்துக் கட்டி விடுவார்கள். அவை கடல் நீரில் மிதந்து கொண்டே வரும். துறைமுகங்களுக்கு வந்து சேர பத்துப் பதினைந்து நாள்கள் ஆகும். அத்தனை நாள்களும் உப்புக்கடல் நீரில் மிதந்தாலும், தேக்குமரத் தடிகள் பாதிக்கப்படாது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட தேக்கு மரங்கள் தான் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள இல்லங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. 

ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த பகுதி 1 ஐ வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.


பொறுத்திருங்கள்.. பழமைகள் பேசுவோம்.. (தொடரும் >>>>)

No comments:

Post a Comment