தேடல் தொடங்கியதே..

Tuesday 22 October 2013

கீழக்கரை அத்தியிலை தெருவில் தேங்கி கிடக்கும் சாக்கடையால் டெங்கு அபாயம் !

கீழக்கரை அத்தியிலை தெருவில் கடந்த நான்கு நாள்களாக, சாக்கடை நீர் தெருவெங்கும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் பெண்மணிகளும், பள்ளிகூடங்களுக்கு சென்று வரும் சிறு பிள்ளைகளும், இந்த சாக்கடையில் நடந்தே செல்கின்றனர். தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் இருக்கிறது. 



இது குறித்து இந்த பகுதியை கடக்க முடியால் தவித்த ஒரு மூதாட்டியிடம் பேசிய போது "பஞ்சாயத்து பொது சாக்கடை குழாயில அடப்பு ஏற்பட்டு நாலு நாள் ஆவுது. இந்த வார்டு கவுன்சிலருட்டே இது சம்பந்தமா, எங்க தெரு புள்ளைவ சொல்லியிருக்கு. ஆனா இது வரை ஒன்னும் நடக்கலை. பஞ்சாயத்து ஆபீஸ் வரைக்கும் போவதற்கு எனக்கு ஏழலை. வாப்பா சீதேவி எதாச்சும் ஏற்பாடு செய்யுங்க" என்று வயோதிக கோபத்தை அடக்கி கொண்டு பேசினார். 



கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தற்போது செயல்படுத்தி வரும் கழிவு நீர் உறிஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை வைத்து, உடனடியாக இந்த சாக்கடை நீரை அப்புறப்படுத்துவதோடு, நட்கராட்சி பொது  கழிவு நீர் குழாயை சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் டெங்கு, மலேரியா போன்ற நோய் நொடிகளை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதும் இப்பகுதி மக்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.  

No comments:

Post a Comment