தேடல் தொடங்கியதே..

Tuesday, 22 October 2013

கீழக்கரை நடுத்தெருவில் பயனற்று கிடக்கும் அபாய வாருகலை விரைந்து மூட பொதுமக்கள் வேண்டுகோள் !

கீழக்கரை நடுத்தெருவின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான, கீழக்கரை டவுன் காஜி அவர்களின் வீட்டு அருகாமையில், ஒரு 'அபாய வாருகால்' இருந்து வருகிறது. இந்த பகுதியிலிருந்து மேடான பகுதி துவங்குவதால் கழிவு நீர் சரியாக ஓடாமல் சாலைகளில் வழிந்தோடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. அதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் வசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து, சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், கழிவு நீர் சரியாக ஓடும் வாட்டத்தை முறையாக செய்ய வேண்டியும், பொது கழிவு நீர் செல்லும் குழாய் தடத்தை ஏற்படுத்தினர். அதன் பிறகு இன்று வரை சாக்கடை நீர் சரியாக சென்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் தற்போது வாருகால் பயனற்ற நிலையில் இருப்பதோடு, காலியாக இருக்கும் இந்த வாருகாலில் குப்பைகள் சேர்ந்து  கொசுக்களின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த பாதை மிகக் குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாகவும் இருக்கிறது. மேலும் இரவு நேரங்களில், தொழுகைப் பள்ளிக்கு செல்லும் பொதுமக்களும், பெண்மணிகளும், சிறுவர்களும், இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் போது இடறி விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த அபாய வாருகாலை மூட ஆவன செய்யும் படி, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இது குறித்து நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் அவர்களிடம் இப்பகுதி பொதுமக்கள் முறையிட்ட போது "பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த அபாய வாருகாலை மூடுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாக தெரிவித்திருக்கிறார். 

No comments:

Post a Comment