தேடல் தொடங்கியதே..

Sunday 20 October 2013

கீழக்கரை குப்பை கிடங்கில் தீ வைக்கும் சமூக விரோதிகள் - நாச வேலையில் ஈடுபடும் கயவர்களுக்கு நகராட்சி சேர்மன் கடும் கண்டனம் !

கீழக்கரை நகரின் மிகப் பிரதான பிரச்சனையாக இருந்து வந்த குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில், தில்லையேந்தல் பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான 12 ஏக்கர் இடத்தில், நவீன குப்பை கிடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குப்பை கிடங்கை சுற்றி சுற்று சுவர் எழுப்பும் பணி  ரூ.21,00000  மதிப்பீட்டில் நடை பெற்று முடிவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, குப்பைகள் கொட்டும் பணி நடை பெற்று வருகிறது. இங்கு கீழக்கரை பகுதியில் நாள் தொடரும் சேரும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது இங்கு சில சமூக விரோதிகள் தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் நெருப்பு மளமளவென பரவி குப்பைகள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இங்கு தீ பற்றி எறியும் தகவல் கிடைத்த உடன், நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா, நகராட்சி ஆணையர் அய்யூப் கான், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 



இது குறித்து கீழக்கரை நகராட்சி சேர்மன் ராவியத்துல் கதரியா அவர்கள் நம்மிடையே பேசும் போது " கடந்த வருடம் ஜூன் மாதத்தில், இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடை பெற்றுக்கொண்டிருக்கும் போதே சில மர்ம ஆசாமிகள் கட்டி முடிக்கப்பட்டிருந்த, சுற்றுச்சுவரின் பெரும் பகுதிகளை உடைத்து தரை மட்டம் ஆக்கியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேன்க் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை நாசப்படுத்தி, 10 க்கும்  மேற்ப்பட்ட சிமிண்டு மூட்டைகளையும் கிழித்து அதனுள் நீரை ஊற்றி அட்டூழியம் செய்தது யாவரும் அறிந்ததே.

அதே போல் கடந்த மாதமும் அ.தி.மு.க ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு, சில சமூக விரோதிகள் குப்பை கிடங்கிற்கு தீ வைத்துள்ளனர். இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ஒரு முன்னாள் கவுன்சிலர், ஒரு இன்னாள் கவுன்சிலர், ஒரு தினப் பத்திரிக்கை விற்கும் கட்சி பிரமுகர் உள்ளிட்ட மூன்று நபர்கள் மீது கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். தற்போது நேற்று முன் தினம் மீண்டும் குப்பை கிடக்கில் தீ வைத்து சென்றுள்ளனர்.


இது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த நாச வேலையில் ஈடுபடும் கயவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஏற்கனவே ஏதாவது வில்லங்கம் செய்து குப்பை கிடங்கை முடக்கும் நோக்கத்தில் இருக்கும் தில்லையேந்தல் பகுதி மக்களுக்கு, இது போன்ற சம்பவம் மகிழ்ச்சியை தருவதாக அமையும். இதையெல்லாம் காரணம் காட்டி, குப்பை கிடங்கு மூடப்படுமானால் பாதிக்கப்படுவது கீழக்கரை மக்கள் தான் என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். " என்று வேதனையுடன் தெரிவித்தார். 



இது குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையர். அய்யூப் கான் அவர்கள் கூறும் போது "இது போன்று சமூக விரோதிகள் தொடர்ச்சியாக குப்பை கிடங்கிற்கு தீ வைத்து செல்வதால், இந்த பகுதியே துர்நாற்றத்துடன் கூடிய புகை மண்டலமாக உருவெடுத்துள்ளது. இதனால் குப்பைக் கிடங்கு செயல்படாத நிலை ஏற்பட்டால், கீழக்கரை நகருக்குள் மீண்டும் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்படலாம். மீண்டும் காவல் துறையில் புகார் அளித்து, நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யப்பட்டுள்ளது."என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment