தேடல் தொடங்கியதே..

Monday, 21 October 2013

கீழக்கரை மஹ்தூமியா உயர் நிலைப் பள்ளியில் நடை பெற்ற அறிவியல் கண்காட்சி - ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்!

புதுடெல்லி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், தமிழக அரசின் பள்ளி கல்வி துறையும் இணைந்து, அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதனை வளர்க்கும் முயற்சியிலும் பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், போட்டிகளை நடத்தி அதில் தேர்ந்தெடுக்கும் மாணவர்களை கொண்டு, இறுதியாக மாநில அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
தற்போது இவ்வாண்டுக்கான  (2013 - 2014) அறிவியல் கண்காட்சியினை நடத்தும் பொருட்டு 'SCIENTIFIC AND MATHEMATICAL INNOVATIONS' என்கிற தலைப்பின் கீழ் விவசாயம், ஆற்றல், உடல் நலம், சுற்றுப்புறம், வளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் கண்காட்சிக்கு மாணாக்கர்களை தயார்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். 

அதன் அடிப்படையில் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தில் கீழ் செயல்படும் மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளியில் இன்று (21.10.2013) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.

இந்த கண்காட்சியினை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர்.ஹாஜா முஹைதீன், துணை தலைவர். கிதுரு முஹம்மது, பள்ளியின் தாளாளர். ஹமீது சுல்த்தான், ஆலோசகர் அப்துல் சத்தார், கல்விக்குழு உறுப்பினர்கள் லெப்பை தம்பி, அபு சாலிஹ், முஹம்மது இபுறாஹீம் மற்றும் ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இந்த அறிவியல் கண்காட்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.கிருஷ்ணவேணி மற்றும் அறிவியல் துறை ஆசிரியை திருமதி.லலிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியில் காற்றழுத்த ராக்கெட், அனல்மின் நிலையம், கடல் நீரை குடிநீராக்கும் செயல்பாடு, காற்றுத்தூக்கி, நிலநடுக்கம் கண்டறியும் கருவி, காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி சோலார் மின்சாரம், சுற்று சூழல் பாதுகாப்பு உட்பட மாணவர்களின் திறமைகள் சிறப்பாக ஒளிர்ந்தன. அறிவியல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு 2010 முதல் 2020 வரை உள்ள வருடங்கள், 'DECADE OF INNOVATIONS' (கண்டுபிடிப்புகளின் பத்தாண்டுகள்) என அறிவித்து, அந்த இலக்கை நோக்கி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மஹ்தூமியா பள்ளியின் மாணவ செல்வங்கள் கல்வியிலும், கற்றல் வழி செயல்பாடுகளிலும் பல்வேறு சாதனைகள் புரிந்து, தேசிய அளவில் முதன்மை பெற கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment