தேடல் தொடங்கியதே..

Tuesday, 9 July 2013

கீழக்கரை நகராட்சியில் கூடுதல் 'சுகாதாரப் பணி ஆய்வாளர்' நியமிக்க, கீழக்கரை நகர் நல இயக்கம் கோரிக்கை !

கீழக்கரை நகர், கடந்த 10 ஆண்டுகளில், மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் சுகாதாரத்திலும், நோய்களின் பெருக்கத்திலும் இணைந்தே உச்சம் கண்டுள்ளது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது. தற்போது கீழக்கரை நகராட்சி பகுதி ஏறத்தாழ 50000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும், 21 வார்டுகளையும் கொண்ட நகராட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் கீழக்கரையில் உள்ள நகராட்சி அலுவலகமாக இருந்தாலும் சரி, காவல் நிலையமாக இருப்பினும் சரி, கடந்த 1970 கால கட்டத்தில் இருந்த அரசு ஊழியர்களின், எண்ணிக்கையே இன்னும் உள்ளது. கடந்த 40 ஆண்டு காலத்திற்கு முன்னால் இருந்த மக்கள் தொகையும், கீழக்கரை நகரின் எல்லை பரப்புமா.? இன்னும் இருக்கிறது. என்கிற கேள்வி மட்டும் சாமானியர்களின் உள்ளத்தில் விடை தெரியாத கேள்வியாக வலம் வருகிறது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சியில் கூடுதல் சுகாதாரப் பணி ஆய்வாளரை நியமிக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறையினருக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக மனு அனுப்பப்பட்டுள்ளது.


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப,நகராட்சியிலும், அரசு அலுவலகங்களிலும் போதுமான அலுவலர்கள் இன்னும் பணியமர்த்தப்படாததால், பணிகளில் வெகுவாக தேக்கம் அடைகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அது போல கீழக்கரை நகராட்சியில் பணியில் இருக்கும் ஒரே ஒரு சுகாதாரப் பணி ஆய்வாளரால், அதிக எல்லை பரப்பு உள்ள கீழக்கரை நகரை முழுமையாக ஆய்வு செய்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகிறது.

போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீடுகளின் இடிபாடுகளை கொட்டுவது, மணல், ஜல்லி செங்கல் போன்ற கட்டுமான பொருள்களை நீண்ட நாள்கள் தெருக்களில் போட்டு வைப்பது, குப்பைகளை கொட்டி குவிப்பது, உணவு விடுதிகளில் கழிவு தண்ணீரை சாலைகளில் ஊற்றி விடுவது என அடுக்கடுக்காக வரும் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தவும், பிறப்பு, இறப்பு பதிவு, சான்றிதழ் போன்ற அத்தியாவசிய பணிகளை விரைவு படுத்தவும், கூடுதல்  'சுகாதாரப் பணி ஆய்வாளர்' நியமிக்க கோரி, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கும், மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment