தேடல் தொடங்கியதே..

Tuesday 9 July 2013

கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலர்களின் 'கூச்சல் குழப்பங்கள்' அத்தனையும் திட்டமிட்ட சதியே.. - கீழக்கரை சேர்மன் தரும் பிரத்யோக பேட்டி !

கீழக்கரை நகராட்சியில் இன்று (09.07.2013) காலை நடை பெற்ற நகர் மன்ற கூட்டத்தில், முறையாக நகராட்சி சட்ட விதிகள்  பின்பற்றப்படாமல், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல் துறையினரால் சமாதனம் பேச முயற்சிக்கப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் செய்த கவுன்சிலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சித் தலைவி இராவியத்துல் கதரியா அவர்கள் கீழை இளையவன் மற்றும் கீழக்கரை டாட் காம் வலை தளத்திற்கு தரும் பிரத்யோக பேட்டி பின் வருமாறு :


கீழை இளையவன் : கீழக்கரை நகராட்சியில் இன்று நடை பெற்ற கூட்டத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், 8 கவுன்சிலர்களை வைத்தே தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

கீழக்கரை சேர்மன் :  இன்று நடை பெற்ற சாதாரண கூட்டத்தில் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு உள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும், இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே கூடத்திற்கான அழைப்பும், தீர்மான பொருள்களின் நகலும் வழங்கப்பட்டு விட்டது. அதில் கூட்டம் 11.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு வராமல், நகராட்சிக்கு எதிரே உள்ள சாயாக் கடையில் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும் வரை நகராட்சி கூட்ட வளாகத்திற்குள் வரவில்லை. அவர்கள் சரியான நேரத்திற்கு வராததால், கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 

மொத்த நகர் மன்ற உறுப்பினர்களில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வந்தாலே, கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றலாம். 8 பேர் கூட்டத்தில் கலந்துள்ளனர். இதில் எந்த சட்ட விதி முறைகளும் மீறப்பட வில்லை. இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளைவித்து வரும் குழப்பங்கள் அனைத்தும் பணத்திற்கு தான். இதில் மக்கள் நலன் குறித்த அக்கறை ஏதும் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்து பார்க்கும் மக்கள் அனைவரும் நன்கறிவர்.




கீழை இளையவன் : நகராட்சி கூட்டத்தில் சுமார் 17 பக்கங்கள் கொண்ட, 29 தீர்மான பொருள்கள் எதுவும் வாசிக்கப்படாமல் அவசரகதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகிறார்களே ..?

கீழக்கரை சேர்மன் :  குற்றச்சாட்டு பொய்யானது. அனைத்து தீர்மானங்களும் முறைப்படி வாசிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுடன் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கீழை இளையவன் :  கவுன்சிலர்களின் கைது குறித்த உங்கள் கருத்து ?

கீழக்கரை சேர்மன் :  கவுன்சிலர்கள் பலர் 'இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது', 'தீர்மானங்கள் நிறைவேற விடாமல் பிரச்சனை செய்ய வேண்டும்' என்று நேற்றே, கூட்டம் போட்டு, திட்டமிட்டே இன்று அரங்கேற்றம் செய்து இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கமிஷனரை ஆக்ரோசத்துடன் சப்தம் போட்டு மிரட்டியதால் தான், அவர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த கைது விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. கவுன்சிலர்களின் இந்த தேவையற்ற போராட்டம், பொது மக்கள் நலனை பாதிக்கும் வகையில் இருப்பதை, இவர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். 

கீழை இளையவன் :  கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கூச்சல், குழப்பங்களால், கீழக்கரை நகரின் வளர்ச்சியை பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்களே ? அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வழி வகை செய்யப்படுமா ?

கீழக்கரை சேர்மன் :  உண்மை தான். அதற்காக எத்தனையோ முற்சிகள் மேற்கொண்டும் பயன் ஏதும் இல்லை. ஒவ்வொரு வளர்ச்சிப் பணிகளும் நிறைவேற பணம் பெற்றுத் தான் ஒப்புதல் வழங்குவோம் என்று ஒரு சில கவுன்சிலர்கள் வெளிப்படையாகவே கேட்கின்றனர். இல்லை என்கிற போது, கூட்டணி சேர்ந்து கொண்டு அவதூறாக குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். பணத்திற்காக அல்லாமல், மக்களுக்கு பணியாற்ற விரும்பும் கவுன்சிலர்களாக இருந்தால் மட்டுமே, இங்கு ஒற்றுமை என்பது ஏற்படும்.

இருப்பினும் கீழக்கரை நகரின் வளர்ச்சிக்கு எங்களால் இயன்ற அளவிற்கு அயராது பாடுபடுவோம். இது வரை பணத்திற்காக எத்தனையோ நோட்டீஸ்களையும், போஸ்டர்களையும் அவதூறாக வெளியிட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நான் தவறுதலாக ஒரு முறை கூட யாரிடமும் கருத்து கூறியது கிடையாது. நம்மை படைத்த படைத்த இறைவன் எல்லாவற்றையும் நன்கு அறிவான். காலம் பதில் சொல்லட்டும். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment